2014-07-12 15:19:29

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறார் குறித்து கவனம் செலுத்த ஐந்து நாடுகளின் ஆயர் பேரவைகள் வேண்டுகோள்


ஜூலை,12,2014. மத்திய அமெரிக்காவிலிருந்து யாருடைய துணையுமின்றி அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் இளவயதினர் விவகாரம் குறித்து கத்தோலிக்கரும், அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த சமுதாயமும் கவனம் செலுத்துமாறு ஐந்து நாடுகளின் ஆயர் பேரவைகள் கேட்டுள்ளன.
மெக்சிகோ வழியாக அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லைகளைச் சென்றடையும் இளவயதினர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, சட்டத்துக்குப் புறம்பே செயல்படும் குழுக்கள் மற்றும் திட்டமிட்டக் குற்றக் கும்பல்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஐந்து நாடுகளின் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் சரியான ஆவணங்களின்றி குடியேறும் மக்களின் மனித மாண்பு மதிக்கப்படவும், மத்திய அமெரிக்காவில் முதலீடுகள் செய்யப்படவும் வலியுறுத்தியுள்ளனர் அவ்வாயர்கள்.
எல் சால்வதோர், ஹொண்டூராஸ், குவாத்தமாலா, மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய ஐந்து நாடுகளின் ஆயர்கள் இணைந்து இவ்வாறு இவ்வாரத்தில் கேட்டுள்ளனர்.
கடந்த அக்டோபரில் நிதி ஆண்டு தொடங்கியதிலிருந்து, மத்திய அமெரிக்காவிலிருந்து பிறர் துணையின்றி தனியாகச் சென்ற 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறாரைக் கைது செய்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லையோர காவல்படை.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.