2014-07-12 15:18:35

FIFA 2014ன் நிறைவுக் கட்டத்தில் திருப்பீட கலாச்சார அவையின் உலக அமைதிக்கான முயற்சி


ஜூலை,12,2014. பிரேசில் நாட்டில் 2014ம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இஞ்ஞாயிறு மாலை நிறைவடையவுள்ளவேளை, “அமைதிக்காகப் போர் நிறுத்தம்” என்ற புது முயற்சியை இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளது திருப்பீட கலாச்சார அவை.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடக்கும்போது, போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், உலகில் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், போர்கள் நடக்கும் இடங்களில் சிந்தப்படும் இரத்தத்தையும், உலக அளவில் காணப்படும் பதட்டநிலைகளையும் நினைத்துப் பார்த்து போர்கள் நிறுத்தப்பட அனைவரும் செபிக்குமாறும் கேட்டுள்ளது திருப்பீட கலாச்சார அவை.
திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் @CardRavasi என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், “அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது(1அரச.19,12)” என்ற விவிலிய சொற்கள் மூலம் இவ்வழைப்பை உலகினருக்கு விடுத்துள்ளார்.
உலகில் அமைதி நிலைபெறுவதற்கு, #PAUSEforPeace என்ற டுவிட்டர் முகவரியில் எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த, திருப்பீட கலாச்சார அவையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Melchor Sanchez de Toca y Alameda அவர்கள், விளையாட்டுகள், சமய விழாக்களையொட்டி பிறந்தன என்று கூறினார்.
விளையாட்டு நிகழ்வுகள் அமைதியின் நேரங்கள் என்றும், ஒலிம்பிக் போர் நிறுத்தம் போன்று, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போதும் ஏன் போர் நிறுத்தம் இடம்பெறக் கூடாது என்றும் கேட்டுள்ளார் பேரருள்திரு Sanchez Alameda.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.