2014-07-11 16:11:48

முஜஃபர்பூர் மறைமாவட்ட புதிய ஆயர் கயத்தான் ஓஸ்டா


ஜூலை,11,2014. இந்தியாவின் முஜஃபர்பூர் மறைமாவட்ட இயேசு சபை ஆயர் ஜான் பாப்டிஸ்ட் தாக்கூர் அவர்களின் பணி ஓய்வை ஏற்று, அம்மறைமாவட்டத்துக்கு அருள்திரு கயத்தான் பிரான்சிஸ் ஓஸ்டா அவர்களை புதிய ஆயராக, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முஜஃபர்பூர் மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் கயத்தான் பிரான்சிஸ் ஓஸ்டா அவர்கள், தற்போது அம்மறைமாவட்டத்தின் நீதித்துறைக்கு உதவித் தலைவராகவும், பேராலயப் பங்குத் தந்தையாகவும் பணியாற்றி வருகிறார்.
1961ம் ஆண்டில் ஹசாரிபாக் மறைமாவட்டத்தில் பிறந்த புதிய ஆயர் ஓஸ்டா அவர்கள், பங்களூரு புனித பேதுரு பாப்பிறை இறையியல் நிறுவனத்தில் திருஅவை சட்டத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
முஜஃபர்பூர் மறைமாவட்டம், 1980ம் ஆண்டில் பாட்னா உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது. இங்குள்ள 3 கோடிக்கு மேற்பட்ட மக்களில் 5,250 பேர் கத்தோலிக்கர். 19 பங்குகள் மற்றும் 16 மறைப்பணித் தளங்களில் 49 அருள்பணியாளர்களும், 20 அருள்சகோதரர்களும், 100 அருள்சகோதரிகளும் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.