2014-07-11 16:12:24

மத்திய கிழக்கில் இடம்பெறும் வன்முறைத் தாக்குதல்களுக்கு WCC மாமன்றம் கண்டனம்


ஜூலை,11,2014. பாலஸ்தீனாவின் காசாவில் வாழும் அப்பாவி மக்கள்மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதல்களையும், காசாவிலிருந்து புரட்சியாளர்கள் இஸ்ரேல்மீது நடத்தும் குண்டு வீச்சு தாக்குதல்களையும் வன்மையாய்க் கண்டித்துள்ளார் WCC உலக கிறிஸ்தவ சபைகள் மாமன்றப் பொதுச் செயலர் Olav Fykse Tveit.
புனித பூமியின் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது, இஸ்ரேலின் ஆக்ரமிப்பை நிறுத்தும் இரு நாடுகள் தீர்வுக்கான கூறுகள் கொண்டுவரப்படாமை ஆகிய இரண்டுமே, சகித்துக்கொள்ள முடியாத தொடர் வன்முறைகளுக்கும், வெறுப்புணர்வு செயல்களுக்கும் காரணமாகியுள்ளன என்று, Tveit அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
கடந்த வாரத்தில் காசாவில் நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதை முன்னிட்டு இக்கண்டன அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டுள்ளார் WCC மாமன்றப் பொதுச் செயலர் Tveit.
இதற்கிடையே, இவ்வெள்ளியன்று காசாவிலிருந்து வீசப்பட்ட ஒரு ராக்கெட் குண்டு இஸ்ரேலின் தென்பகுதி நகரான அஷ்டொட்டில் பெட்ரொல் நிலையம் ஒன்றின்மீது விழுந்துள்ளது.
இத்தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகின்ற இந்தச் சண்டையில் முதல் தடவையாக லெபனனிலிருந்து இஸ்ரேலின் வடக்கே ராக்கெட்டுகள் முன்னதாக வீசப்பட்டிருந்தன என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.