2014-07-10 15:50:04

புலம் பெயர்ந்தோர் காட்டும் துணிவும் உறுதியும் நமக்குப் பாடங்களாக அமைகின்றன - கர்தினால் மரதியாகா


ஜூலை,10,2014. நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டக் குழுக்களைக் காணும்போது, ஒவ்வொரு குழுவிலும் வேற்று நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இணைந்துள்ள விளையாட்டு வீரர்களைக் காண முடிகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள C 9 என்றழைக்கப்படும் கர்தினால்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் Oscar Rodriguez Maradiaga அவர்கள், அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.
புலம் பெயர்ந்தோரை மையப்படுத்தி, அமெரிக்க ஆயர் பேரவை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யும் கருத்தரங்கில் முக்கிய உரை வழங்கிய கர்தினால் மரதியாகா அவர்கள், புலம் பெயர்ந்தோர் காட்டும் துணிவும் உறுதியும் நமக்குப் பாடங்களாக அமைகின்றன என்று கூறினார்.
சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வழியாக, புலம் பெயர்ந்தோரைத் தடுக்க ஒவ்வொரு நாடும் எழுப்பும் அரண் போன்ற அமைப்புக்களைத் தாண்டும் மன உறுதியை நாடு விட்டு நாடு செல்லும் மனிதர்கள் நமக்கு உணர்த்தியவண்ணம் உள்ளனர் என்பதை கர்தினால் மரதியாகா அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
நாடுகள் என்ற எல்லைகள் இல்லாத கத்தோலிக்கத் திருஅவை, புலம் பெயர்ந்தோர் சார்பில் தொடர்ந்து போராடி வருகிறது என்பதையும் கர்தினால் மரதியாகா அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.