2014-07-10 15:59:25

காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு எல்லையை திறந்துவிட எகிப்து முடிவு


ஜூலை,10,2014. எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் ரஃபா என்ற இடத்திலுள்ள முக்கிய எல்லைப் பகுதியை ஓரளவுக்கு திறந்துவிட எகிப்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்த பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்குள் வர அனுமதிப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம்.
காசாவிலுள்ள சுரங்கப் பாதைகள், ஏவுகணைகள் நிலைகொண்டுள்ள இடங்கள் உட்பட நூற்றுக்கணக்கான இடங்களை இலக்குவைத்து புதன் இரவு வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கான் யூனிஸ் நகரில் ஒரு காப்பி கடையில் உலகக் கோப்பை கால்பந்தாட்டமொன்றை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒன்பது பேர் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனர்களும் இஸ்ரேல் மீது தொடர்ந்து இராக்கெட் குண்டுகளை வீசிவருகின்றனர். ஆனால் இஸ்ரேலிய தரப்பில் யாரும் உயிரிழந்ததாக செய்திகள் இல்லை.
தற்போதைய கொந்தளிப்பு ஆரம்பித்ததிலிருந்து காசாவில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.