2014-07-10 15:51:35

அப்ரிக்கத் தலத்திருஅவைக்கு அமெரிக்க ஆயர் பேரவையின் 13 இலட்சம் டாலர்கள் நிதி உதவி


ஜூலை,10,2014. அப்ரிக்கத் தலத்திருஅவையின் 46 திட்டங்களுக்கு உதவும் வண்ணம், அமெரிக்க ஆயர் பேரவை, 13 இலட்சம் டாலர்களை அண்மையில் நிதி உதவியாக வழங்கியுள்ளது.
ஆப்ரிக்கத் திருஅவை விரைவாக வளர்ந்துவரும் ஒரு திருஅவை எனினும், அத்திருஅவை சந்திக்கும் சவால்களும் பெருகிவருகின்றன என்று, வாஷிங்க்டன் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Theodore McCarrick அவர்கள் கூறியுள்ளார்.
இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அமெரிக்க ஆயர் பேரவை துணைக் குழுவின் ஓர் உறுப்பினரான கர்தினால் McCarrick அவர்கள், அருள் பணியாளர்கள் பயிற்சி, தலைமைத்துவ உருவாக்கம், நீதி, அமைதி முயற்சிகள் ஆகிய திட்டங்களை மையப்படுத்தி, இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.
ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா சுவாசிலாந்து பகுதிகளில் பெண்கள் தங்கள் இல்லங்களில் சந்திக்கும் வன்முறைகளிலிருந்து விடுதலை பெற நீதி ஆலோசனைகள் வழங்கும் திட்டங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.