2014-07-09 16:24:38

தொலைபேசித் தொடர்பு, கைப்பட எழுதும் கடிதங்கள் ஆகியவற்றில் திருத்தந்தை கொண்டுள்ள ஆர்வம் - பேராயர் Celli


ஜூலை,09,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊடகத்துறையின் புதியத் தொழிநுட்பங்களில் ஆர்வம் கொண்டவர் எனினும், பாரம்பரியத் தொடர்பு வழிகளை தொடர்ந்து பின்பற்றுவதில் அவர் தவறுவதில்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீடத்தின் சமூகத் தொடர்புப்பணி அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli அவர்கள், திருத்தந்தையின் கூற்றுகளை பல்வேறு சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவதை எளிதாக்க, The Pope app எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை இத்திங்களன்று திருத்தந்தையிடம் சமர்பித்தார்.
வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், இத்தொழில்நுட்பத்தை திருத்தந்தை வெகு ஆர்வமாக ஏற்றுக்கொண்டார் என்று கூறிய பேராயர் Celli அவர்கள், பாரம்பரிய தொடர்பு வழிகளான தொலைபேசித் தொடர்பு, தன் கைப்பட எழுதும் கடிதங்கள் ஆகியவற்றிலும் திருத்தந்தை ஆர்வமாக ஈடுபடுகின்றார் என்று கூறினார்.
ஊடகங்களுக்கு வழங்கும் நேர் காணல்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உள்ளத்தில் எழும் உண்மைக் கருத்துக்களை உள்ளபடியே பகிர்வதில் தயக்கம் காட்டுவதில்லை என்பதையும், பேராயர் Celli அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
புதிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றும் கத்தோலிக்கத் திருஅவை, பாரம்பரியத் தொடர்புத் துறைகளிலும் சமமான ஆர்வம் கொண்டிருக்கவேண்டும் என்று பேராயர் Celli அவர்கள் தன் பேட்டியில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.