2014-07-09 16:27:07

இயேசு சபையினரின் முயற்சியால் உருவாகியுள்ள சேவியர் 'டிஜிட்டல்' பல்கலைக் கழகத்தின் திறப்புவிழா


ஜூலை,09,2014. இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள சேவியர் பல்கலைக் கழகம், வருங்கால அறிஞர்களையும், அறிவியல் மேதைகளையும், நாட்டிற்கும், உலகிற்கும் நன்மைகள் செய்யும் தலைவர்களையும் உருவாக்கும் என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள் கூறினார்.
இயேசு சபையினரின் முயற்சியால் உருவாகியுள்ள சேவியர் 'டிஜிட்டல்' பல்கலைக் கழகத்தை, ஒடிஸ்ஸா மாநிலத்தின் தலைநகர், புபனேஸ்வரில், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள், இச்செவ்வாயன்று துவக்கி வைத்தார்.
இந்தத் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய பேராயர் ஜான் பார்வா அவர்கள், நல்லறிவையும், நன்னெறியையும் பெறுவதற்கு இப்பல்கலைக் கழகத்தை நாடிவரும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்று கூறினார்.
2013ம் ஆண்டு ஒடிஸ்ஸா மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்று, மாநில ஆளுநரின் அங்கீகாரத்தையும் பெற்ற இந்தப் பல்கலைக் கழகத்தில், மேலாண்மையியல் துறையில் முதுகலை, மற்றும் முனைவர் பட்டங்கள் பெறும் வாய்ப்புக்கள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இல்லாத அளவு, இந்தப் பல்கலைக் கழகத்தில், ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும் என்று சேவியர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இயேசு சபை அருள் பணியாளர் Paul Fernandes அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.