2014-07-08 15:09:09

புனிதரும் மனிதரே - வரலாறு படைத்த புனிதர் பட்டமளிப்பு விழா


1890ம் ஆண்டு இத்தாலியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த மரிய கொரட்டி, தன் சிறுவயது முதல் இறைப்பற்று மிகுந்த வாழ்வு நடத்தினார். அவருக்கு 12 வயது நடந்தபோது, 18 வயது இளைஞன் அலெக்சாண்டர், அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றபோது, தன் தூய்மையை இழப்பதற்குப் பதில், உயிரை இழக்கத் தயார் என்று அச்சிறுமி சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் அவரை பலமுறை கத்தியால் குத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமி மரிய கொரட்டி, தான் அலெக்சாண்டரை மனதார மன்னிப்பதாகக் கூறியபின் உயிர் துறந்தார்.
சிறுமி மரிய கொரட்டி கொலையுண்டு 45 ஆண்டுகள் கழிந்தபின், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அச்சிறுமியை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தபோது, 82 வயது நிறைந்த அவரது தாய் அசுந்தா அவர்கள், தன் ஏனைய பிள்ளைகளுடன் அந்த விழாவில் கலந்துகொண்டார்.
3 ஆண்டுகள் கழிந்து, 1950ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, வத்திக்கானில் வரலாறு ஒன்று படைக்கப்பட்டது. ஆம், அன்று திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற மரிய கொரட்டி அவர்களை, புனிதராக அறிவித்த நிகழ்வு, ஒரு வரலாறு படைத்த நிகழ்வாக மாறியது. வழக்கமாக புனிதர் பட்ட அறிவிப்புக்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்குள் நடைபெறும். முத்திப்பேறு பெற்ற சிறுமி மரிய கொரட்டியின் வாழ்வு பலரை ஈர்த்ததாலும், அவருக்கு புனிதர் பட்டம் தரப்படுவது உலகெங்கும் பெரு மகிழ்ச்சியை உருவாக்கியதாலும், உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக, இளையோர், அந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆவல் கொண்டனர்.
இந்நிகழ்வு உலகெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதால், முதல் முறையாக புனிதர் பட்ட அறிவிப்பு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நடத்தப்பட்டது. தன் மகள் புனிதராக உயர்த்தப்படும் அற்புத நிகழ்வில் ஒரு தாய் பங்கேற்பது அதுவே முதன்முறை என்பது, திருஅவையில் மற்றொரு வரலாற்று உண்மை. அதுமட்டுமல்ல, புனித மரிய கொரட்டியைக் கத்தியால் குத்திய அலெக்சாண்டரும் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களில் ஒருவராக, அவ்விழாவில் கலந்துகொண்டார். 48 வயதான அலெக்சாண்டர், தன் வாழ்வின் இறுதி 40 ஆண்டுகளை பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் கடும் தவத்தில் செலவிட்டார். தூய்மையின் மறைசாட்சி என்று அழைக்கப்படும் புனித மரிய கொரட்டியின் திருநாள் ஜூலை 6ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.