2014-07-08 16:05:24

திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளோடு இருக்கையில் எதுவும் இழக்கப்படுவதில்லை


ஜூலை,08,2014. கடவுளோடு இருக்கையில் எதுவும் இழக்கப்படுவதில்லை, ஆனால் கடவுளின்றி வாழும்போது அனைத்தும் இழக்கப்படுகின்றன என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சனவரி திருப்பயணத்திற்காகத் தயாரித்துவரும் பிலிப்பைன்ஸ் மக்கள் திருத்தந்தைபோல் வாழ முயற்சிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Socrates Villegas.
"அவருடைய கருணையால் தேர்ந்தெடுக்கப்பட்டு"(Miserando atque eligendo) என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருதுவாக்கைப் பின்பற்றி, பிலிப்பைன்ஸ் நாட்டவர் கருணையை, தேசிய அடையாளமாகக் கைக்கொண்டு வாழுமாறு தனது நான்கு பக்க மேய்ப்புப்பணி அறிக்கையில் கேட்டுள்ளார் பேராயர் Villegas.
பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கியுள்ள பெரிய அரசியல் ஊழல் பற்றியும் குறிப்பிட்ட பேராயர் Villegas, ஊழல்புரிந்தவர்களைக் குற்றவாளிகள் எனச் சுட்டிக்காட்டுவது மிகவும் எளிது, ஆனால் அதில் தனக்கு எவ்வளவு பங்கு கிடைத்தது என்பதைச் சொல்வதற்கு நிறையத் துணிச்சலும் நேர்மையும் தேவை என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு சனவரியில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிலிப்பைன்சில் 2014ம் ஆண்டு பொதுநிலையினர் ஆண்டாகச் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/CNS







All the contents on this site are copyrighted ©.