2014-07-08 16:05:55

ஈராக்கின் இன்றைய நிலைமை மிகவும் இருளடைந்துள்ளது, முதுபெரும் தந்தை சாக்கோ


ஜூலை,08,2014. ஈராக் தலத்திருஅவையின் அண்மை வரலாற்றில் நாட்டின் தற்போதைய நிலைமை, மிகவும் இருளடைந்து, இன்னல் நிறைந்ததாகத் தெரிவதாகக் கூறியுள்ளார் பாக்தாத் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
ஈராக்கின் இன்றைய நிலைமை குறித்து CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்துக்குத் தொலைபேசி பேட்டியளித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கடந்த ஜூன் 28ம் தேதியன்று கடத்தப்பட்ட இரண்டு அருள்சகோதரிகளும், மூன்று கருணை இல்லச் சிறாரும் பத்திரமாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இப்பேட்டி மூலமும் மீண்டும் விண்ணப்பித்தார்.
மோசூல் நகரம் கிறிஸ்தவர்கள் இல்லாமல் ஏறக்குறைய காலியாக இருக்கின்றது, ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன, ஞாயிறு திருப்பலிகள் கிடையாது, குருக்கள் இல்லை எனக் கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ, மோசூல் நகரின் பேராலயங்கள் புரட்சியாளர்களால் ஆக்ரமிக்கப்பட்டு, முகப்புகளில் இருந்த சிலுவைகள் அகற்றப்பட்டு, அவ்விடங்களில் இஸ்லாமிய நாட்டின் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் தாங்கள் நம்பிக்கையை இழக்காமல் விசுவாசத்தில் உறுதியாய் வாழ்ந்து வருவதாகவும், செபம் அற்புதங்களை ஆற்றும் என்பதால் கடத்தப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களோடு நல்ல உறவுகளோடு தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையிலான ஆக்ரமிப்புக்கு முன்னர் 12 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 8 இலட்சமாகி. அது தற்போது அதிலும் பாதிக்கும் குறைவாகவே உள்ளது எனவும் கவலை தெரிவித்தார் கல்தேய கத்தோலிக்க முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.