2014-07-08 16:06:17

இந்தியாவில் 14 இலட்சம் குழந்தைகள், தங்கள் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்னரே இறந்துவிடுகின்றனர், ஐ.நா.


ஜூலை,08,2014. தெற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான வருவாயில் வாழ்கின்றனர் என்று, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
“ஐ.நா. மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகள் 2014” என்ற அறிக்கையை இத்திங்களன்று வெளியிட்டுப் பேசிய பான் கி மூன், உலகில் 2010ம் ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்ந்த 120 கோடி மக்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் இந்தியாவில் வாழ்ந்தனர் எனவும் கூறினார்.
உலகில் இடம்பெறும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டிருக்கும் இந்தியாவில், அவ்வெண்ணிக்கை 2012ம் ஆண்டில் 14 இலட்சமாக இருந்தது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.
இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதிலும், இந்த இறப்புகளில் மூன்றில் ஒன்று அப்பகுதிகளில் இடம்பெறுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது
வறுமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் இந்தியாவில், குழந்தை இறப்பு விகிதம் இன்னமும் குறையவில்லை எனவும் ஐ.நா.கூறியுள்ளது.
உலகில் இடம்பெறும் மகப்பேறுகால இறப்புகளில் 17 விழுக்காடு இந்தியாவிலும், 14 விழுக்காடு நைஜீரியாவிலும் இடம்பெறுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : PTI







All the contents on this site are copyrighted ©.