2014-07-08 16:06:09

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டுள்ள அருள்பணி பிரேம் குமார் சே.ச. அந்நாட்டிலே இருக்கின்றார், JRS நம்பிக்கை


ஜூலை,08,2014. ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டுள்ள தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அந்நாட்டிலே இன்னும் இருப்பதாக, அனைத்துலக இயேசு சபை அகதிப்பணி அமைப்பான JRS கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதிப்பணி அமைப்புக்கு இயக்குனராக இருந்து பணி செய்து வந்த அருள்பணியாளர் பிரேம் குமார் பற்றிக் கிடைத்துள்ள அனைத்துத் தகவல்களின்படி, அவர் அந்நாட்டிலே உயிரோடு இருக்கின்றார் எனத் தன்னால் கூற முடிகின்றது என, இத்திங்களன்று அறிவித்தார் JRS இயக்குனர் இயேசு சபை அருள்பணியாளர் Peter Balleis.
கடந்த ஜூன் 2ம் தேதி Herat நகரில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்களிடமிருந்தோ அல்லது அவரைக் கடத்தியவர்களிடமிருந்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென்றாலும், அவர் உயிரோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கின்றது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் அருள்பணியாளர் Balleis.
47 வயதான அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்களின் விடுதலைக்காக JRS அமைப்பு ஆப்கான் அதிகாரிகளோடும், அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளோடும் இணைந்து வேலை செய்து வருகிறது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் Herat நகருக்கு ஏறத்தாழ 15 மைல்கள் தூரத்திலுள்ள Sohadat கிராமத்தில் JRS ஆதரவுடன் நடத்தப்பட்டுவரும் அகதிகளுக்கான பள்ளிக்குச் சென்று திரும்பிவந்த வழியில் இனம்தெரியாத குழு ஒன்றினால் கடத்தப்பட்டார் தமிழக இயேசு சபை அருள்பணியாளர் பிரேம் குமார்

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.