2014-07-07 14:56:00

புனிதரும் மனிதரே : பிள்ளைகளின் நல்வாழ்வால் மறைசாட்சிகளான பெற்றோர்(Saints Hesperius, Zoe)


கி.பி இரண்டாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசர் ஏட்ரியன் ஆட்சி செய்த காலத்தில், Hesperius, அவரது மனைவி Zoe ஆகிய இருவரும், துருக்கியின் பம்பிலியா நகரின் அத்தாலியாவில் Catalus என்ற பணக்கார உரோமையர் வீட்டில் அடிமைகளாக வேலை செய்துவந்தனர். இந்த அடிமைத் தம்பதியர் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் தங்கள் விசுவாசத்தை வாழ்க்கையில் செயல்படுத்தவில்லை. எனினும் இத்தம்பதியர் தங்களின் மகன்கள் Cyriacus, Theodulus ஆகிய இருவரையும் நல்ல கிறிஸ்தவர்களாக வளர்ப்பதில் அக்கறை காட்டினர். அவர்களும் நல்ல கிறிஸ்தவர்களாக சிறந்த வாழ்வு வாழ்ந்தனர். இதனால் Hesperius, Zoe தம்பதியர், தங்களின் வாழ்வை எண்ணி வெட்கமடைந்தனர். ஒருநாள் இவர்களின் முதலாளி Catalusக்கு மகன் பிறந்ததையடுத்து விழாக் கொண்டாடப்பட்டது. விழாக்களின்போது கடவுள்களுக்கு உணவு படைத்து அவற்றை எல்லாரும் உண்பது அக்காலத்திய வழக்கம். Catalus குடும்பத்தில் நடந்த விழாவின்போது, Hesperius, Zoe தம்பதியர், தங்கள் மகன்களின் வாழ்வைப் பின்பற்றி, கடவுள்களுக்கு படைத்த உணவை உண்பதற்கு மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு கிறிஸ்துவை மறுதலிக்குமாறு துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால், முதலில் இவர்கள் முன்னிலையில் இவர்களின் இரு மகன்களையும் சித்ரவதைப்படுத்தினர். ஆனால் Hesperius, Zoe தம்பதியரும் சரி, அவர்களின் இரு மகன்களும் சரி கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முதலாளி Catalus, அவர்கள் நால்வரையும் எரியும் நெருப்புச் சூளையில் தூக்கிப்போட்டுக் கொன்றான். கி.பி.135ம் ஆண்டுவாக்கில் மறைசாட்சிகளான் இவர்களின் விழா ஜூலை 08. இதே நாளில் மறைசாட்சிகள் அக்கில்லா-பிரிசில்லா தம்பதியரின் விழாவும் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.