2014-07-07 16:07:58

பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டோருள் ஆறுபேர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூலை,07,2014. அருள் பணியாளர்களால் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டோருள் ஆறுபேர் ஞாயிறு மாலையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்கு வந்ததாகவும், அன்றே திருத்தந்தையைச் சந்தித்ததுடன், திங்கள் காலை, அவர் ஆற்றியத் திருப்பலியில் கலந்துகொண்டதாகவும் திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், Federico Lombardi அவர்கள் கூறினார்.
பாலியல் முறையில் அருள் பணியாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஆறு பேரில், மூவர் ஆண்கள், மூவர் பெண்கள் என்றும் கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், ஜெர்மனி, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து, நாட்டிற்கு இருவர் என்ற முறையில் வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
சிறுவர், சிறுமியர் பாலியல் முறையில் அருள் பணியாளர்களாலும் ஆயர்களாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணைகள் மேற்கொண்டுவரும் அவையின் தலைவரும் பாஸ்டன் கர்தினாலுமான Seán Patrick O'Malley அவர்கள் மேற்கொண்ட முயற்சியால், திருத்தந்தையுடன் இச்சந்திப்பு இடம்பெற்றது என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் எடுத்துரைத்தார்.
பாலியல் முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த ஆறுபேருடன் துணைக்கு வந்த ஆறுபேரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலையில் தனித் தனியாகச் சந்தித்து, கலந்துரையாடல் நடத்தியதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள் பணியாளர் Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.