2014-07-07 16:09:45

திருத்தந்தை பிரான்சிஸ் : சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு ஆறுதல் வழங்க கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு


ஜூலை,07,2014. இன்றைய உலகில் ஏழைநாடுகளிலிலும் பணக்கார நாடுகளிலும் ஏழ்மைநிலையில் வாழும் மக்கள், ஏனையோரின் பாராமுகங்களாலேயே அதிக அளவில் காயப்படுவதாக தன் மூவேளை செப உரையின்போது கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
என்னிடம் வாருங்கள் நான் உங்களை இளைப்பாற்றுவேன் என இயேசு கூறியது, அவரை பின்பற்றும் அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆறுதல் அளிக்க முன்வரவேண்டும் என்பதற்குமான அழைப்பாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கைவிடப்படுதலாலும் பாராமுகங்களாலும் எண்ணற்றோர் துன்புறும் இக்காலங்களில், இயேசுவின் அழைப்பு மேலும் அர்த்தம் நிறைந்ததாக உள்ளது என உரைத்தார்.
கிறிஸ்தவர்களும் தங்கள் அடுத்தவர்மீது பாராமுகத்துடன் நடந்துகொள்வது குறித்த கவலையையும் தெரிவித்தார் திருத்தந்தை.
ஏழைகளையும், பாவிகளையும், நோயாளிகளையும் ஒதுக்கப்பட்டோரையும் தெருக்களில் கண்ட இயேசு இத்தகைய நம்பிக்கையின் வார்த்தைகளை அவர்களுக்கு வழங்க விரும்பினார், அத்தகைய நம்பிக்கைகளையே நாமும் பிறருக்கு வழங்கவேண்டும் என அவர் விரும்புகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் பலர் ஏழ்மை நிலைகளைத் தாங்க முடியாமல் தங்கள் உயிரையும் பணயம் வைத்து வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவது குறித்தும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைச் சுரண்டிவரும் பொருளாதார அமைப்புமுறையில் ஏழை மக்கள் பலர் துவண்டுவரும் நிலைகளையும் சுட்டிக்காட்டினார்.
இயேசுவிடமிருந்து புத்துணர்வையும் ஆறுதலையும் பெற்ற மக்கள், அதனை மற்றவர்களுக்கும் வழங்கவேண்டிய கடமையைப் பெற்றுள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
தன் மூவேளை செப உரையின் இறுதியில், இத்தாலியின் மொலிசே மக்களுக்கு தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சனிக்கிழமையன்று தான் அப்பகுதியில் திருப்பயணம் மேற்கொண்டபோது தங்கள் நகரிலும் இதயங்களிலும் தன்னை வரவேற்றதற்காக நன்றி கூறுவதாக உரைத்து, தனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.