2014-07-05 15:31:38

பெண் சிசுக்கள் கொல்லப்படுவது மனித வணிகம் அதிகரிப்புக்குக் காரணம்


ஜூலை,05,2014. தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் பாலினம் கண்டுபிடிக்கும் சட்டத்துக்குப் புறம்பான பரிசோதனைகள் அதிகரித்து வருவதே மனித வணிகம் அதிகரிப்பதற்குக் காரணம் என இந்திய நீதிமன்றம் ஒன்று கூறியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய ஒரு கோடி பெண் சிசுக்கள் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளன என்றுரைத்த நீதிபதி Kamini Lau, இந்தப் பெண் சிசுக்கொலைக் குற்றத்தில் நீதிமன்றங்கள் இரக்கம் காட்டவே கூடாது எனக் கூறினார்.
இந்தியாவில் பிறக்கும் ஒரு கோடியே 20 இலட்சம் பெண் குழந்தைகளில் 10 இலட்சம் குழந்தைகள் ஒரு வயதை எட்டும் முன்னரே கொல்லப்படுகின்றன, பல மாநிலங்களில் ஏழைக் குடும்பங்கள் இளவயதுச் சிறுமிகளை குறைந்த விலைக்கு விற்பதற்கு இதுவே காரணம் என்றும் Lau கூறினார்.
ஐ.நா.வின் உலக மக்கள் தொகை நிதி அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட நீதிபதி Kamini Lau, உலகில் பாலினத்தில் அதிக வேறுபாடு காணப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : IANS







All the contents on this site are copyrighted ©.