2014-07-05 15:12:06

புனிதரும் மனிதரே - மரணப் படுக்கையில் மன்னிப்பு வழங்கியச் சிறுமி


12 வயது சிறுமியைக் கொன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட அலெக்சாண்டர் என்ற 18 வயது இளைஞன், 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து வெளியேறியதும், அச்சிறுமியின் வீட்டுக்கு நேரேச் சென்று, தான் கொலை செய்த சிறுமியின் தாயிடம் மனமுருகி மன்னிப்பு வேண்டினார். அந்தத் தாயும் அவரை மன்னித்தார். இது நிகழ்ந்தது, 1929ம் ஆண்டு. 1902ம் ஆண்டு, அலேக்சாண்டரால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமியின் பெயர், மரிய கொரட்டி.
18 வயது நிறைந்த அலெக்சாண்டர், சிறுமி மரிய கொரட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றபோது, அச்சிறுமி அவரிடம், "நான் என் தூய்மையை இழப்பதற்குப் பதில், உயிரை இழக்கத் தயார்" என்று சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் அவரை மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமி மரிய கொரட்டி, தான் அலெக்சாண்டரை மனதார மன்னிப்பதாகக் கூறியபின் உயிர் துறந்தார்.
இக்கொலைக்குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்ட அலெக்சாண்டர், தன் தவறுக்காகச் சிறிதும் மனம் வருந்தாமல், கடின உள்ளத்துடன் வாழ்ந்தார். ஒரு நாள் அவர் கனவில் மரிய கொரட்டி தோன்றி, அவரிடம் லீலி மலர்களைக் கொடுத்தார் என்றும், அவற்றைத் தான் பெற்றதும் அவை தன் கரங்களில் ஒளிமிகுந்த மலர்களாயின என்றும், அத்தருணத்தில் மரிய கொரட்டியின் மன்னிப்பை, தான் உணர்ந்ததாகவும் அலெக்சாண்டர் கூறினார். தன் தவறுக்காக மனம் வருந்தி, முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வைத் துவக்கினார். 27 ஆண்டுகளுக்குப் பின், அவரது 45வது வயதில் விடுதலை பெற்றார். தன் வாழ்வின் மறுபாதியை அவர் ஒரு பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் செலவிட்டு, தன் 88வது வயதில் இறைவனடி சேர்ந்தார். தூய்மையின் மறைசாட்சி என்று அழைக்கப்படும் புனித மரிய கொரட்டியின் திருநாள் ஜூலை 6ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.