2014-07-05 15:30:37

ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்துக்கு ஆதரவாகச் செயல்பட திருத்தந்தை வலியுறுத்தல்


ஜூலை,05,2014. காம்ப்போபாசோ Romagnoli விளையாட்டுத் திடலில் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்துக்கு ஆதரவாகச் செயல்படுமாறு வலியுறுத்தினார்.
தொழில் துறைகளில் மனித மாண்பு முக்கிய இடத்தை வகிக்க வேண்டுமெனவும், திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் இறைவனுக்கும், பிறருக்கும் பணிசெய்யவும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
திருஅவை இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களைக் கொண்டது, அது, தான் வழங்கும் சுதந்திரத்தில் வாழ்கின்ற மக்களைக் கொண்டது, திருஅவை வழங்கும் இச்சேவை, அன்றாட வாழ்வில் செபம், ஆராதனை, நற்செய்தி அறிவித்தல், பிறரன்புப் பணிசெய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் கூறினார் திருத்தந்தை.
பொருளாதார மற்றும் ஆன்மீக வாழ்வில் உறுதியற்ற சூழல்களில், குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை துன்பத்தின் மத்தியில், திருஅவை பிறருக்கான சேவையில் இன்னும் அதிகமாகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் கூறிய திருத்தந்தை, இவ்வுலகின் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகள், இக்கால வேலைகள் முன்வைக்கும் சவால்களுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்று செயல்பட அழைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு செயலிலும் மனித மாண்பு மையமாக அமைய வேண்டும், மற்றவை நியாயமானதாக இருந்தாலும் அவை இரண்டாவது இடத்தில் வைக்கப்பட வேண்டியவை, ஏனெனில் மனிதர் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டவர், நாம் எல்லாரும் இறைவனின் சாயலாக உள்ளோம் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.