2014-07-04 15:46:04

ஜூலை 05,2014. புனிதரும் மனிதரே. – தமஸ்கு நகர புனித யோவான்


தமஸ்கு நகர புனித யோவான் 676ம் ஆண்டு தமஸ்கு நகரில் பிறந்து 749ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் காலமானார்.
பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராகத் திகழ்ந்தார். இவர் தமஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராக முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து, துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார். திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கீழை வழிபாட்டுமுறை திருஅவையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமஸ்கு யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன. இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
இவர் கத்தோலிக்கத் திருஅவையின் மறைவல்லுநர்களுள் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் எனப்படுகின்றார். இவருடைய திருவிழா டிசம்பர் 4ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.