2014-07-04 16:03:55

இந்தியா : குழந்தை இறப்பைத் தடுக்க மேலும் நான்கு தடுப்பு மருந்துகள் இலவசம்


ஜூலை, 04,2014. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில், நான்கு புதிய தடுப்பு மருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
பல ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொல்லும் ரோட்டாவைரஸ் என்ற தொற்றைத் தடுக்கும் மருந்து ஒன்றும் இதில் அடங்குகிறது.
இந்த ரோட்டாவைரஸ் தொற்று, கடுமையான வயிற்றுப்போக்கை உருவாக்கி, நீர்ச்சத்து இழப்பால் குழந்தைகளைக் கொல்கிறது.
நோய்க் கிருமி தொற்றிய, சரியாகக் கழுவப்படாத கைகள் மற்றும் மேற்பரப்புகளால் தொற்றும் இந்த நோய் ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் இந்த வயிற்றுப்போக்கு காரணமாக ஆண்டுதோறும் 80,000 குழந்தைகளும், மூளைக்காய்ச்சலால் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான குழந்தைகளும் இறக்கின்றனர்.
இது தவிர, ருபெல்லா, போலியோ, மூளைக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்களைத் தடுக்கும் புதிய தடுப்பு மருந்துகளும் இனிமேல் இந்தியாவில் இலவசமாகத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூளைக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்ட 179 மாவட்டங்களில் இந்தப் புதிய தடுப்பு மருந்து தரப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் இலவசமாகத் தரப்படும் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 13ஆக உயர்கிறது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.