2014-07-03 17:05:04

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் பகுதிக்கு வருகை தருவது, தங்களை கருணையிலும், இரக்கத்திலும் வளர்க்கும் - பேராயர் Bregantini


ஜூலை,02,2014. ஜூலை 5ம் தேதி, வருகிற சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் பகுதிக்கு வருகை தருவது, தங்களை கருணையிலும், இரக்கத்திலும் வளர்க்கும் என்றும், சந்திக்கும் கலாச்சாரத்தை தாங்கள் பின்பற்ற உதவும் என்றும் இத்தாலிய பேராயர் ஒருவர் கூறினார்.
வருகிற சனிக்கிழமையன்று இத்தாலியின் Campobasso-Bojano உயர் மறைமாவட்டத்திலும், அதன் அருகில் அமைந்துள்ள Isernia மறைமாவட்டத்திலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் குறித்து பேராயர் Giancarlo Bregantini அவர்களும், ஆயர் Camillo Cibotti அவர்களும் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளனர்.
புனிதரான திருத்தந்தை 5ம் Celestine அவர்கள், Isernia என்ற இடத்தில், 1215ம் ஆண்டு பிறந்ததைக் குறிப்பிட்ட ஆயர் Cibotti அவர்கள், இவரது பிறப்பின் 800வது ஆண்டு நினைவை, Isernia மறைமாவட்டம், திருத்தந்தையின் வருகையுடன் துவங்கும் என்று குறிப்பிட்டார்.
"கடவுள் மன்னிப்பதில் என்றும் சலிப்படைவதில்லை" என்ற கருத்தை மையப்படுத்தி அமையவிருக்கும் திருத்தந்தையின் இந்தப் பயணத்தில், அவர், நோயுற்றோர், இளையோர், சிறைப்பட்டோர் ஆகியோரைச் சந்திப்பதை முக்கியக் கருத்தாகக் கொண்டுள்ளார் என்று பேராயர் Bregantini அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், "என் அன்பு இளையோரே, நீதி நிறைந்த ஓர் உலகை உருவாக்க நீங்கள் காணும் கனவைக் கைவிடாதீர்கள்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.