2014-07-03 16:54:35

இறைவன் விடுத்துவந்த அழைப்பிற்கு தொடர்ந்து பதில் சொல்லிவந்தவர் கர்தினால் லூர்துசாமி - கர்தினால் சாந்த்ரி


ஜூலை,02,2014. இறைவன் வழங்கிய கொடைகளை முற்றிலும் பயன்படுத்தி, ஒவ்வொரு நிலையிலும் அவர் விடுத்துவந்த அழைப்பிற்கு தொடர்ந்து பதில் சொல்லிவந்த கர்தினால் லூர்துசாமி அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூலை 2, இச்செவ்வாய் மாலை, உரோம் நகரில், கர்தினால் லூர்துசாமியின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்ட Fornaci அன்னை மரியா ஆலயத்தில், மறைந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுடைய 30ம் நாள் நினைவு திருப்பலியை, கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் நிறைவேற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ், இரு பேராயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், பொது நிலையினர் கலந்துகொண்ட இத்திருப்பலியில், கர்தினால் சாந்த்ரி அவர்கள், கர்தினால் லூர்துசாமி அவர்கள் வாழ்வின் பல நிலைகளை நினைவுகூர்ந்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உடல் நிலை குன்றியிருந்த கர்தினால் லூர்துசாமி அவர்களை அன்புடன் பராமரித்துவந்த அருள் சகோதரிகளை, கர்தினால் சாந்த்ரி அவர்களும், கர்தினால் கிரேசியஸ் அவர்களும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
கர்தினால் லூர்துசாமி அவர்களின் உறவினரான வின்சென்ட் அவர்கள், திருப்பலியின் இறுதியில் பேசியபோது, மறைந்த கர்தினால் அவர்களை ஆயராக திருநிலைப்படுத்திய திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், அவரை கர்தினாலாக உயர்த்திய திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் தற்போது புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும், கர்தினால் அவர்களுடன் தொடர்பு கொண்ட திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் விரைவில் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட விருப்பத்தையும் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.