2014-07-02 14:45:10

புனிதரும் மனிதரே : சீட்டுக்குலுக்கலில் விழுந்த நாட்டுக்குச் சென்ற திருத்தூதர் (St.Thomas, the Apostle)


பெந்தெகோஸ்தே திருநாளில் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இயேசுவின் திருத்தூதர்கள், இயேசுவின் ஆணைப்படி உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டனர். அப்போது யார் யார் எங்கெங்கு செல்வது என்று பார்ப்பதற்குச் சீட்டுக்குலுக்கிப் பார்த்தனர் என பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்ததில் திருத்தூதர் தோமாவுக்கு, பார்த்தியர்கள், மேதியர்கள் மற்றும் பெர்சியர்கள் வாழும் பகுதிக்குச் சீட்டு விழுந்தது. இதன்படி, தற்போதைய ஈரானின் வடகிழக்கு, வடமேற்கு, இன்னும், ஈரானின் பிற பகுதிகளில் வாழ்ந்த இம்மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கச் சென்ற தோமா, இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நற்செய்தி அறிவித்ததாக, தோமா பணிகள் நூலில் சொல்லப்பட்டுள்ளது. தோமா அவர்கள், இந்தியாவுக்கு எப்படிச் செல்வது என சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஹப்பான் என்ற வணிகரைச் சந்தித்தார். இந்த வணிகர், அரசர் ஆணைப்படி நல்ல தச்சுத்தொழில் தெரிந்த யூதரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவர். இயேசுவே இந்த வணிகரை சந்தித்து, நல்ல தச்சர் ஒருவர் இருக்கிறார், அவரை அழைத்துச் செல் என்று கூறி, திருத்தூதர் தோமா அவர்களை அனுப்பி வைத்ததாகப் பாரம்பரியச் செய்திகள் கூறுகின்றன. இச்செய்தியின்படி, தோமா, வணிகர் ஹப்பானுடன் பயணம் செய்து தட்சசீலம் எனும் இடத்தை அடைந்தார். நாலந்தாவுக்கு இணையான பழங்கால நகர் தட்சசீலம். நாலந்தாவும் தட்சசீலமும், பழங்கால இந்தியாவின் முக்கிய கல்வி மையமாகக் கருதப்படுபவை. தட்சசீலம் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் உள்ளது. இங்கிருந்த அரசரிடம் தோமாவை அறிமுகப்படுத்தினார் ஹப்பான். ஒரு பெருந்தொகையை தோமாவிடம் கொடுத்து தனக்கு ஓர் அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டித்தருமாறு சொன்னார். ஆனால் தோமாவோ, அப்பணத்தை ஏழை எளியவர்க்கென செலவழித்துவிட்டார். இதையறிந்த அரசர் இவ்விருவரையும் கைது செய்து சிறைவைத்தார். இதற்கிடையே அரசரின் சகோதரர் நோயுற்று இறந்தார். தோமாவையும் ஹப்பானையும் கொலைசெய்ய அரசர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசரின் சகோதரர் அரசருக்குக் கனவில் தோன்றி, நான் விண்ணகத்தில் தோமா கட்டியுள்ள அரண்மனையில் நலமோடு இருக்கிறேன். அவரை ஒன்றும் செய்துவிடாதே என்று கூற, அரசரும் மனம்மாறி அவர்களை விடுதலை செய்ததாகப் பாரம்பரியம் கூறுகிறது. பின்னர் திருத்தூதர் தோமா, இந்தியாவின் மலபார் பகுதிக்கு நற்செய்தி அறிவித்தார். பல இடங்களில் நற்செய்தி அறிவித்து பின்னர் சென்னை மயிலைப் பகுதிக்கு வந்தார். கிபி 72ம் ஆண்டில் இன்றைய புனித தோமையார் மலையில் நற்செய்திக்காக ஈட்டியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். சாந்தோமில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை சாந்தோம் தேசியப் பேராலயத் திருத்தலம் இப்புனிதரின் கல்லறைமீது கட்டப்பட்டுள்ளது. திருத்தூதர் தோமாவின் விழா ஜூலை 03.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.