2014-07-02 16:01:15

திருத்தந்தை பிரான்சிஸ் - இறையழைத்தல் என்பது ஒரு தற்காலிகமான ஒப்பந்தம் அல்ல


ஜூலை,02,2014 மரியன்னை மீது பற்றில்லை என்று சொல்லும் கிறிஸ்தவர்களைக் காணும்போது எனக்கு வருத்தமாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தங்களுக்கு இறையழைத்தல் உள்ளதா என்பதைத் தேடிவரும் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இளையோர் பலரை கடந்த வார இறுதியில் வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள அன்னை மரியா கெபியில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வில் அன்னை மரியா வகிக்கும் மிக முக்கியப் பங்கைக் குறித்துப் பேசினார்.
அன்னை மரியாவிடம் பக்தி கொண்டிருப்பது வெறும் மேலோட்டமான பக்தி உணர்வு மட்டுமல்ல, மாறாக, அன்னை மரியாவையும், அன்னை திருஅவையையும் அன்பு கூர்வது உண்மையான இறையியல் கருத்து என்று திருத்தந்தை இளையோரிடம் எடுத்துரைத்தார்.
மேலும், இறையழைத்தல் என்பது ஒரு தற்காலிகமான ஒப்பந்தம் அல்ல, மாறாக, ஒருவரது வாழ்வு முழுவதும் மேற்கொள்ளவேண்டிய ஓர் உறவு என்பதையும் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
இறையழைத்தலாக இருந்தாலும் சரி, திருமண உறவாக இருந்தாலும் சரி, இன்றையச் சூழலில் தற்காலிகம் என்ற எண்ணம் மிக அதிகமாக நியாயப்படுத்தப்படுகிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகைய எண்ணத்திலிருந்து இளையோர் விடுபட்டு, நிரந்தர உறவுகளை வளர்க்கும் பக்குவம் பெறவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.