2014-07-02 16:05:58

கடத்தப்பட்ட அருள் சகோதரிகளையும், அனாதைக் குழந்தைகளையும் கடத்தல்காரர்கள் விடுவிக்க வேண்டும் - முதுபெரும் தந்தை சாக்கோ


ஜூலை,02,2014 ஈராக் நாட்டின் Mosul நகரில் நான்கு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட இரு அருள் சகோதரிகளையும், மூன்று அனாதைக் குழந்தைகளையும் கடத்தல்காரர்கள் விடுவிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள் விடுத்துள்ளார்.
முனிவர்களையும், அனாதைகளையும் அன்புடன் நடத்தவேண்டும் என்று திருக்குரானில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர், முஸ்லிம்கள் அந்நாட்டில் படையெடுத்து வந்தபோது, அவர்களை வரவேற்றது கிறிஸ்தவர்களே என்பதையும் தன் விண்ணப்பத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் சிறப்பு மாதமான இரமதான் மாதத்தில், கருணையும், பிறரன்பும் வெளிப்படவேண்டும் என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட அனைவரும் செபிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாசற்ற மரியன்னை துறவுச் சபையைச் சேர்ந்த இரு அருள் சகோதரிகளையும், இரு சிறுமிகளையும், ஒரு சிறுவனையும் ஜூன் 28ம் தேதி கடத்தியவர்களிடமிருந்து இதுவரை எத்தகவலும் வரவில்லை என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.