2014-07-02 14:42:32

அமைதி ஆர்வலர்கள் – 1935ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Ossietzky


ஜூலை,02,1014 “நமது மனசாட்சி உறங்கிக் கொண்டிருக்கும்போது உலகின் மனசாட்சிக்கு நாம் விண்ணப்பிக்க இயலாது” என்று சொன்னவர் Carl von Ossietzky. 1935ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Carl von Ossietzky அவர்கள், 1889ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஜெர்மனியின் Hamburgல் பிறந்தவர். அரசுப் பணியாளராகிய இவரது தந்தை, ஜெர்மன்-போலந்து எல்லைப்புறத்திலுள்ள ஒரு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். Ossietzkyக்கு ஏழு வயது நடந்தபோது 1891ம் ஆண்டில் இவரது தந்தை காலமானார். அதன்பின்னர் இவரது தாய், பொதுவுடமை சனநாயகவாதியான Gustav Walther என்பவரை திருமணம் செய்தார். இவரே, பிற்காலத்தில் Ossietzkyல் அரசியல் ஆர்வம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் தனது நகராட்சி நிர்வாகத்தில் வேலை செய்வதற்காக 17வது வயதில் படிப்பை நிறுத்தினார். விரைவில் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கினார். சுதந்திர மக்கள் (Das Freie Volk ) என்ற வார இதழில் இவரது முதல் கட்டுரை வெளியானது. இந்த இதழ் அந்நாட்டு சனநாயக கழகத்தின் இதழாக இருந்தது. Erfurtல் இராணுவத்துக்கு ஆதரவாக வெளிவந்த நீதிமன்றத் தீர்மானத்தை விமர்சனம் செய்து 1913ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி இவர் ஒரு கட்டுரை வெளியிட்டார். இதனால் இவர் பொதுநலனை அவமதிக்கிறார் என, புருசியப் போர்ப்பணித் துறையால் குற்றம் சாட்டப்பட்டார். இதற்கிடையே 1914ம் ஆண்டு மே 22ம் தேதி Maud Woods என்ற ஆங்கிலேயப் பெண்ணைத் திருமணம் செய்தார் Ossietzky. இவரது திருமணம் முடிந்து சில நாள்களுக்குள்ளேயே இந்த வழக்கு விசாரணைக்காக Ossietzky நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆயினும், இவரது புது மனைவி, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இரகசியமாக பணம் கொடுத்து அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.
Ossietzky உடல்பலம் குன்றியவராக இருந்தபோதிலும், அவர் பவேரிய இராணுவப் பிரிவில் பணி செய்வதற்காக 1916ம் ஆண்டு ஜூனில் அழைக்கப்பட்டார். எனினும், முதல் உலகப் போருக்குப் பின்னர், இவர் போரை ஒழிப்பதிலும் அமைதியை ஏற்படுத்துவதிலும் சனநாயக அமைப்புமுறையிலும் உறுதியுள்ளவராகி தனது சொந்த ஊர் திரும்பி தனது சொற்பொழிவுகளால் மக்கள் மத்தியில் அமைதிக்கான ஆர்வத்தையும், அமைதிக்கான மனநிலையையும் உருவாக்கினார். இதனால் ஜெர்மன் அமைதி கழகத்தின் தலைவரானார். Der Wegweiser(The Signpost) என்ற இதழைத் தொடங்கினார் Ossietzky. ஆனால் நிதி ஆதரவு கிடைக்காததால் அதை அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பின்னர் ஜெர்மன் அமைதி கழகத்தின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. அங்கு தகவல் தாள் (Mitteilungsblatt) என்ற பெயரில் 1920ம் ஆண்டு சனவரி முதல் நாள், முதல் மாத இதழை வெளியிட்டார். அந்த இதழில் இவர் தவறாது தொடர்ந்து எழுதி வந்தார். இந்த அலுவலக வேலையில் சலித்துப்போன Ossietzky, பெர்லின் மக்கள் தினத்தாளில்(Berliner Volkszeitung) வெளிநாட்டு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்தச் செய்தித்தாள் பிரிவினையை விலக்கும், போரை எதிர்க்கும் அதேநேரம் சனநாயகத்தை ஆதரிக்கும் நோக்கங்களைக் கொண்டிருந்தது.
பெர்லின் மக்கள் தினத்தாளில் பணிசெய்த அனைத்து ஆசிரியர் பணியாளர்களும் குடியரசு கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த காலக் கட்டத்தில், Ossietzky அவர்களும், 1923 முதல் 1924ம் ஆண்டுகளில் அரசியலில் ஈடுபட்டார். ஆனால் 1924ம் ஆண்டு மே மாதம் நடந்த Reichstag தேர்தலில் இக்கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் Ossietzky, Journal (Tagebuch) என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார். ஆயுதக்களைவில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் பார்த்து, 1926ம் ஆண்டில், Siegfried Jacobsohn என்பவர் தனது The World Stage (Die Weltbühne) என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரியக் கேட்டுக்கொண்டார். Jacobsohn இந்த இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, ஜெர்மனி இரகசியமாக மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். Jacobsohn 1926ம் ஆண்டு டிசம்பரில் திடீரென இறக்கவே, Jacobsohn அவர்களின் இத்தகைய முயற்சிகளை Carl von Ossietzky தொடர்ந்து செய்யுமாறு அவரின் மனைவி கேட்டுக்கொண்டார். 1919 முதல் 1935 வரை ஜெர்மனியின் இராணுவ நிறுவனமாக இருந்த Reichswehr, அந்நாட்டின் உப இராணுவ அமைப்புகளின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் மன்னித்துவிடுவதைக் கண்டித்து 1927ம் ஆண்டு மார்ச் மாதத்தில் The World Stage இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதற்காக, Ossietzky குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஜெர்மனியின் இராணுவ அச்சுறுத்தலுக்குப் பணிய மறுத்து, Walter Kreiser என்பவர் எழுதிய கட்டுரையை 1929ம் ஆண்டு மார்ச்சில் வெளியிட்டார் Ossietzky. ஜெர்மனி இரகசியமாக ஆயுதங்களைக் குவிப்பது Versailles உடன்படிக்கையை மீறுவதாக உள்ளது என அக்கட்டுரை விமர்சித்திருந்தது. இதனால் குற்றம் சுமத்தப்பட்ட Ossietzky 1929ம் ஆண்டு ஆகஸ்டில் விசாரிக்கப்பட்டார். இராணுவ இரகசியங்களைக் காட்டிக்கொடுக்கிறார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட Ossietzky, 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு Spandau சிறையில் இருந்தபோது, கிறிஸ்மஸ் பொதுமன்னிப்பு என்ற நடவடிக்கையில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் 1932ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1933ம் ஆண்டு தொடக்க காலங்களில் மேலும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் ஜெர்மனியின் அரசியல் நிலைமையின் தன்மையை அலசினார். ஆனால் அவர் நாட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார். எல்லைகள் எங்கும் வெற்றுக் குரலால் பேசும் மனிதர் என்று சொல்லிக்கொண்டார். பெர்லின் நகரின் Reichstag இராணுவ நிறுவனத்தின் கட்டிடத்துக்கு 1933ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி டச்சுக்காரர் ஒருவர் தீ வைத்தார். அதற்கு அடுத்த நாள் காலையில் இரகசிய காவல்துறை Ossietzky வீட்டை முற்றுகையிட்டு முதலில் பெர்லின் சிறைக்கும், பின்னர், Sonnenburg வதைப்போர் முகாம், அதன் பின்னர் Esterwegen-Papenburg வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டார். சக கைதிகளின் கூற்றுப்படி, Ossietzky இந்த முகாம்களில் முறைகேடாக நடத்தப்பட்டார் எனவும், அவர் மாரடைப்பால் தாக்கப்பட்டிருந்தும் கனமான வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார் எனவும் தெரிகிறது.
Carl von Ossietzky அவர்கள் முதலில் 1934ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கெனப் பரிந்துரைக்கப்பட்டார். Berthold Jacob என்ற அவரது தோழரே இம்முயற்சி எடுத்தார். ஆனால் இந்தப் பரிந்துரை தாமதமாக நொபெல் விருதுக்குழுவைச் சென்றடைந்ததால், 1935ம் ஆண்டுக்கென இவரது பெயரை அக்குழு வைத்திருந்தது. ஆயினும் இவர் 1936ம் ஆண்டு விருதுக்கென அக்குழு பின்னர் ஓட்டளித்தது. இதற்கிடையே Ossietzky அவர்கள் TB காசநோயால் தாக்கப்பட்டார். அதனால் அவர் உயிர்வாழ்வதற்கு சிறிது காலமே இருந்தது. அதேநேரம், ஜெர்மன் அரசு, அவரை வதைப்போர் முகாமிலிருந்து விடுதலை செய்ய மறுத்துவிட்டது. Ossietzky நொபெல் அமைதி விருதுக்குத் தகுதியற்றவர் எனப் பொதுப்படையாகச் சொல்லி அவர் அந்த விருதைப் புறக்கணிக்குமாறும் வலியுறுத்தியது ஜெர்மன் அரசு. ஆனால் ஜெர்மன் விளம்பர அமைச்சகம், Ossietzky நார்வே சென்று அவ்விருதைப் பெறலாம் எனப் பொதுப்படையாக அறிவித்தது. எனினும், இரகசிய காவல்துறையின் ஆவணங்களின்படி, Ossietzky அவர்களுக்கு கடவுசீட்டு மறுக்கப்பட்டது எனவும், பொது மருத்துவமனைக்கு அவர் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 1938ம் ஆண்டு மே மாதம் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார் எனவும் தெரிகின்றது. Ossietzkyக்கு நொபெல் விருது வழங்கப்பட்டது குறித்து ஜெர்மன் பத்திரிகைகள் எழுதுவதற்கு தடைசெய்யப்பட்டிருந்தன. வருங்காலத்தில் ஜெர்மன் நாட்டவர் எவரும் நொபெல் விருதை ஏற்கக் கூடாது என ஜெர்மன் அரசு ஆணையிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
“நமது மனசாட்சி உறங்கிக் கொண்டிருக்கும்போது உலகின் மனசாட்சிக்கு நாம் விண்ணப்பிக்க இயலாது” என்று சொன்னவர் 1935ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Carl von Ossietzky.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.