2014-07-01 15:53:47

புனிதரும் மனிதரே – அரசு அதிகாரி, ஆன்மீகப் பணியாளராக...


1616ம் ஆண்டு ஒரு நாள், இத்தாலியின் Lecce என்ற நகரில், 85 வயதான இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர், மிகுந்த நோயுற்று, மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட அந்நகர மக்கள் பலர், இயேசு சபையினர் இல்லத்திற்கு முன் கூடினர். அந்நகரின் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் அருள்பணியாளர் படுத்திருந்த அறைக்குச் சென்றனர். Lecce நகரை அந்த அருள்பணியாளர் தன் அருள்காவலில் வைத்திருக்கவேண்டும் என்று அவரிடம் விண்ணப்பித்தனர். பேசமுடியாமல் சிரமப்பட்ட அருள்பணியாளர் பெர்னார்டின் ரியலினோ (Bernardine Realino) அவர்கள், ஒரு புன்னகையுடன், அவர்கள் விண்ணப்பத்தை ஏற்பதுபோல் தலையை அசைத்தார். சிறிது நேரம் சென்று, இயேசு, மரியா இவர்களின் புனிதப் பெயர்களை உச்சரித்தவாறே அருள் பணியாளர் பெர்னார்டின் இறைவனடி சேர்ந்தார்.
1530ம் ஆண்டு, இத்தாலியின் ஓர் உயர் குடியில் பிறந்த பெர்னார்டின் அவர்கள், தன் இளவயதில் மருத்துவம் பயிலத் துவங்கினார். மூன்று ஆண்டுகள் இத்துறையில் பயின்றுவந்த இவர், பின்னர், சட்டத்துறையில் தேர்ச்சி பெற்று, 1563ம் ஆண்டு, அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, பல அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. நேப்பிள்ஸ் நகரின் உயர் அதிகாரியாக பெர்னார்டின் நியமிக்கப்பட்டார்.
அந்த உயர் பொறுப்பில் இவர் இருந்தபோது, இயேசு சபையினருடன் தொடர்பு உருவானது. அவர்களிடம் 8 நாள் ஆன்மீகப் பயிற்சி மேற்கொண்ட வேளையில், அன்னை மரியா, இவரை இயேசு சபையில் சேரும்படி கட்டளையிட்டதாகச் சொல்லப்படுகிறது.
1564ம் ஆண்டு, தன் 34வது வயதில், இவர் இயேசு சபையில் இணைந்தார். எளியதொரு வாழ்வை பின்பற்ற விழைந்த இவர், இயேசு சபையில் ஒரு சகோதரராக வாழ்வதற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இவரை அருள்பணியாளர் பயிற்சியில் இணைத்து, மூன்றே ஆண்டுகளில் இவரை அருள்பணியாளராக திருநிலைப்படுத்தினர். தன் வாழ்வின் 42 ஆண்டுகளை Lecce நகருக்கென அர்ப்பணித்து, அங்கு இவர் உருவாக்கிய ஒரு கல்லூரியில் வாழ்நாளின் இறுதிவரை பணியாற்றினார்.
1616ம் ஆண்டு இறைவனடி சேர்ந்த பெர்னார்டின் ரியலினோ அவர்களை, 1947ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் புனிதராக உயர்த்தினார். Lecce நகரின் திருத்தூதர் என்றும், பாதுகாவலர் என்றும் அழைக்கப்படும் புனித பெர்னார்டின் ரியலினோ அவர்களின் திருநாள் ஜூலை 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.