2014-06-28 16:20:47

புனிதர்களான பேதுரு, பவுல் பெருவிழா – ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மூன்று ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஒரு நண்பரை, தனக்குத் தெரியாது என்று சொல்லி, தன் உயிரைக் காத்துக்கொண்ட ஒரு மீனவர், அதே நண்பருக்காக தன் உயிரைக் கொடுத்தார். சீமோன் என்ற இயற்பெயர்கொண்ட அந்த மீனவர், தன் நண்பரும், தலைவருமான இயேசுவைப் போல தனக்கும் சிலுவை மரணம் விதிக்கப்பட்டது என்பதை அறிந்ததும், தன்னைச் சிலுவையில் தலைகீழாக அறையுமாறு கேட்டுக்கொண்டார். அதே நிலையில் உயிர் துறந்தார் புனித பேதுரு.
பிறந்த குழந்தை ஒன்றைக் கொல்லும் வெறியுடன் அலைந்த ஒரு சட்ட அறிஞர், அதே குழந்தைக்காகத் தன் உயிரைக் கொடுத்தார். புதிதாகப் பிறந்திருந்த கிறிஸ்துவ மறையை வேரோடு அழிக்கும் வெறியுடன் அலைந்த சவுல் என்ற அந்த இளைஞன், பவுலாக மாறி, அதே கிறிஸ்தவ மறைக்காக தலை வெட்டுண்டு உயிர் துறந்தார். இவ்விருவரையும் இணைத்து, ஜூன் 29, இஞ்ஞாயிறு, கத்தோலிக்கத் திருஅவை, பேதுரு, பவுல் ஆகிய இரு புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகிறது.
வத்திக்கானின் மையமாக அமைந்துள்ள புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் நுழையும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை, புனித பேதுரு, பவுல் ஆகிய இருவரின் பிரம்மாண்டமான உருவச்சிலைகள். இவ்வளாகத்தின் முகப்புப் பக்கத்திலிருந்து பார்க்கும்போது, இவ்விரு புனிதர்களும், பின்னணியில் இருக்கும் பசிலிக்காவைத் தாங்கி நிற்கும் தூண்கள் போலக் காட்சியளிக்கின்றனர். இது வெறும் தோற்றம் அல்ல, இது வரலாற்று உண்மை. புனித பேதுருவும், பவுலும் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
ஆனால், துவக்கத்திலிருந்தே இவ்விருவரையும், குறிப்பாக, இயேசுவுடன் வாழாத பவுல் அடியாரை, பேதுருவுக்கு இணையான ஒரு தலைவராக அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. துவக்கக் காலத் திருஅவையில் யார் பெரியவர், யார் தலைவர் என்ற கேள்விகள் எழத்தான் செய்தன. கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே தங்கள் பணி என்பதை, திருத்தூதர்கள் உறுதியாக உணர்ந்தபோதும், அவர்களைப் பின்பற்றிய தொண்டர்களிடம் வேற்றுமை உணர்வுகள் வளரவே செய்தன. இத்தகைய வேற்றுமை உணர்வுகளால் எழுந்த பிரச்சனைகளை, திருத்தூதர் பணிகள் நூலும், பவுல் அடியாரின் திருமுகங்களும் பதிவு செய்துள்ளன.
குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து, தட்டுத் தடுமாறி வளர்ந்த கிறிஸ்தவ மறைக்கு வெளியிலிருந்து எழுந்த எதிர்ப்புக்கள், வன்முறைகள் ஒருபுறம். கிறிஸ்தவக் குடும்பத்திற்குள்ளேயே எழுந்த வேற்றுமை உணர்வுகள் மறுபுறம். இத்தகையச் சூழலில் யூதர்களையும், வேற்று இனத்தாரையும் ஒருங்கிணைத்து, திருஅவை என்ற குழந்தையை வளர்த்த பெருமை, புனிதர்களான பேதுரு, பவுல் ஆகிய இருவரையும் சேரும்.
கல்வியறிவு அதிகமின்றி, மீனவராக வளர்ந்த பேதுருவுக்கும், யூதமறையின் சட்டங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த பவுலுக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் அதிகம். இருப்பினும், இந்த வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், இவ்விருவரும் இயேசுவைப் பறைசாற்றியதால், கடந்த 20 நூற்றாண்டுகளையும் தாண்டி, இவ்விரு புனிதர்களும், அவர்கள் பறைசாற்றிய இயேசுவும் உலகிற்கு பொருளுள்ளவர்களாக விளங்குகின்றனர்.
இன்றைய உலகிலும் கிறிஸ்தவ மறைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. வெளியிலிருந்து வரும் எதிர்ப்புக்களையும், வன்முறைகளையும் சமாளிப்பதற்கு, திருஅவைக்குள்ளும் கிறிஸ்தவ மறைக்குள்ளும் ஒற்றுமை உறுதி பெற வேண்டும். புனிதர்களான பேதுரு, பவுல் பெருவிழாவன்று, இந்த ஒற்றுமைக்காக நம் மன்றாட்டுக்களை இறைவனிடம் இப்புனிதர்கள் வழியே சமர்ப்பிப்போம்.
புகழ்பெற்ற இவ்விருவரின் பெருவிழாவுக்கென வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, இயேசுவையும், அவரது சீடர்களையும் பற்றி இன்னும் சில தெளிவுகளையும், பாடங்களையும் தருகின்றது. மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும், அல்லது, இருக்கவேண்டிய உள்ளார்ந்த தேடலை மையப்படுத்தி இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள் நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில் பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி. இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இன்றைய நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நமக்குப் பாடங்கள் சொல்லித் தரும் என்ற நம்பிக்கையுடன் நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.
"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"
"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பன இயேசுவின் இரு கேள்விகள்
நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, பிரதம மந்திரி அல்லது முதல் அமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இத்தகவல்களைப் பட்டியலிடுவதன் முக்கிய நோக்கம்... நாட்டு நடப்பு பற்றி தெரிந்து கொள்வது ஒரு முக்கிய நோக்கம் என்றாலும், நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" தங்களைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சரியானப் புரிதல் இல்லாத இத்தலைவர்கள் மனதில் தோன்றும் சந்தேகமும், பயமும் இக்கேள்வியை அவர்களிடம் எழுப்புகின்றன. மக்களை முன் நிறுத்தி, மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, அதன்படி செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை...
"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இக்கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள்... நல்லதும், பொல்லாததும்... உண்மையும், பொய்யும்... விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும்... அளவுக்கதிகமாகவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப்பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு.
"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" உங்களையும் என்னையும் பார்த்து இயேசு கேட்கிறார், இந்தக் கேள்வியை. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், ஆசிரியர்களிடம் நான் பயின்றவைகளை, மனப்பாடம் செய்தவைகளை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம்.
ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.
நான் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இக்கேள்விக்குப் பதிலாக வேண்டும். நான் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இக்கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இக்கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்கலாம். "என்ன இது... திடீர்னு இயேசு முகத்துல அறைஞ்சா மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டார்... எனக்கு அப்படியே, வெலவெலத்துப் போச்சு... என்ன சொல்றதுன்னே தெரியல..." இப்படி நீங்களும் நானும் உணர்ந்தால், அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. “என்னைப்பற்றிப் புரிந்து கொள்… என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா” என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் அழைப்பு.
கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். இவர்களில் ஒரு சிலர் கயிற்றின் மேல் படுத்தல், சாப்பிடுதல், சைக்கிள் சவாரி செய்தல்... என்று பல வியக்கத்தக்க சாகசங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.
உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர் இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்றாக, மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக் கொண்டு அந்தக் கயிற்றில் நடந்தார். அதை அவர் அற்புதமாக செய்து முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடி வந்து, அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்." என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு ஈடுபாடு, நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.
"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்வி பட்ட போது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது நானே அவற்றை நேரில் கண்டுவிட்டேன். இனி உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை." என்று பரவசப்பட்டுச் சொன்னார்.
"மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி செய்யமுடியுமா?" என்று கேட்டார் அந்தக் கழைக்கூத்துக் கலைஞர்.
"உம்.. சொல்லுங்கள்." என்று அவர் ஆர்வமாய் சொன்னார் இரசிகர்.
"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப் போகிறேன். இந்த முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.
அந்தக் கழைக்கூத்துக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர் அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்ய விழைந்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர் தன் திறமையில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்து விட்டார்.
இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர் 13:1)
எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.
இயேசுவின் இந்த அழைப்பைப் புரிந்தும் புரியாமலும், சீமோன்: “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பதிலளித்தார். சீமோனின் பதில் எந்த ஒரு மனித முயற்சியாலும் சொல்லப்பட்ட பதில் அல்ல என்பதை உணர்ந்த இயேசு, அவருக்கு, பேதுரு என்ற பெயரை அளித்து, ஒரு பொறுப்பையும் ஒப்படைக்கிறார். ஒரு பாறையாக நின்று திருஅவையைத் தாங்கவேண்டிய பேதுரு, தன் மனித இயல்பால் தொடர்ந்து தவறுகள் இழைத்தார். இருப்பினும், தன் உயிரைத் தரும் அளவுக்கு இயேசுவின் சாட்சியாக வாழ்ந்தார்.
இயேசுவுடன் தட்டுத் தடுமாறி நடைபயின்ற பேதுரு, மற்றும் இயேசுவின் வழியை அறவே அழித்துவிட புறப்பட்ட பவுல் இருவரும், இயேசுவைத் தங்கள் சொந்த அனுபவத்தில் சந்தித்தபின், இறுதி மூச்சு வரை உறுதியாய் இருந்ததுபோல், நாமும், சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்ந்து, அவருக்காக எதையும் இழக்கும் துணிவு பெறவேண்டும் என்று, புனித பேதுரு, பவுல் ஆகியோரின் பரிந்துரையோடு மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.