2014-06-28 16:43:27

ஆசிய இளையோர் தினத்தில் திருத்தந்தை கலந்துகொள்வது, அருள் நிறைந்த தருணமாக அமையும், ஆசிய ஆயர்கள்


ஜூன்,28,2014. தென் கொரியாவின் Daejeonல், வருகிற ஆகஸ்ட் 10 முதல் 17 வரை நடக்கவிருக்கும் ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கலந்துகொள்ளவிருப்பது, நிச்சயமாக அருள் மற்றும் மகிழ்வு நிறைந்த தருணமாக அமையும் என்று ஆசிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களில், திருத்தந்தை ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்றுரைத்த, ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் இளையோர் பணிக்குழுத் தலைவர் ஆயர் ஜோயெல் பைலோன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதி இளையோரைச் சந்திப்பார் மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அவர்களுக்கு விழாத் திருப்பலி நிகழ்த்துவார் என்று தெரிவித்தார்.
ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களில் நேரிடையாகப் பங்குகொள்ள இயலாவிட்டாலும், அந்நாள்களின் அருள்வரங்களைப் பெறுவதற்கு அச்சமயத்தில் மனதால் ஒன்றித்து, திருத்தந்தை வழங்கும் செய்தியை, பிள்ளைகளுக்குரிய பக்தியோடு செவிமடுத்தால் போதுமானது என்று பிலிப்பின்ஸ் ஆயர் பைலோன் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இளையோரோ, முதியோரோ யாராக இருந்தாலும் உண்மையின் நற்செய்தியை அறிவித்து இறையன்புக்குச் சாட்சிகளாய் வாழ்வதற்கு நற்செய்தியின் மறைப்பணியாளர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் ஆயர் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.