2014-06-27 16:03:27

மனிதநேயத்துடன் மருத்துவம் பார்க்கும் மயிலாடுதுறை டாக்டர் வி.ராமமூர்த்தி


ஜூன்,27,2014. இந்தியாவின் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி அவர்கள், சிகிச்சை பெற கட்டண வசூல் இன்றி மருத்துவம் பார்த்துவரும் மனிதநேய மருத்துவர் எனப் பாராட்டியுள்ளது தி இந்து நாளிதழ்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வாழ்ந்து வரும் டாக்டர் வி. ராமமூர்த்தி அவர்கள், 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவருகிறார் என்றும், சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை என்றும், இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும் என்றும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
டாக்டர் வி.ராமமூர்த்தி அவர்கள், சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகளிடம் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை எனவும், தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜைமீது வைத்துச் செல்லலாம் எனவும், காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
79 வயதை எட்டியுள்ள டாக்டர் ராமமூர்த்தி அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்துவிட்டு, ஊருக்குச் செல்ல செலவுக்குப் பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் எனவும் அவ்விதழில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தபோது அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காகச் செய்யக் கூடாது என்பதுதான். இதுவே தன்னை இவ்வாறு செய்யத் தூண்டியதாகவும் இவர் “தி இந்து” நிருபர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.