2014-06-27 16:02:55

நைஜீரியாவில் வன்முறைகளை நிறுத்தி உரையாடலைத் தொடங்குமாறு வலியுறுத்தல், கர்தினால் Onaiyekan


ஜூன்,27,2014. தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் நைஜீரியாவில் வன்முறையை நிறுத்தி உரையாடலின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan.
நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பெரிய கடை ஒன்றில் இப்புதனன்று (ஜூன்25) இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்பு, அபுஜாவில் கடந்த பத்து வாரங்களில் இருமுறை வன்முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இத்தாக்குதல் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அபுஜா பேராயர் கர்தினால் Onaiyekan அவர்கள், இத்தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகள் தொடர்ந்து இவற்றைச் செய்யாதவாறு தடுக்க வேண்டியது நம் கடமை என்று கூறினார்.
குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து இவர்களைக் கண்காணிக்க வேண்டுமென்று கூறிய அபுஜா கர்தினால், பல ஆண்டுகள் வன்முறைகள் இன்றி அமைதியாக இருந்த நைஜீரியாவில் தற்போதைய வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உரையாடலின் பாதை தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார் கர்தினால் Onaiyekan.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.