2014-06-27 16:02:22

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகளாக மாற வேண்டும்


ஜூன்,27,2014. நம்மை தம் கரங்களில் தாங்கியிருக்கும் கனிவான தந்தை போன்றவர் இறைவன், அவரோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகள் போல் மாற வேண்டும் என, இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திரு இதய விழாவான இவ்வெள்ளி காலை, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலி மறையுரையில், இறைவனுக்கும் அவர்தம் மக்களுக்கும் இடையேயுள்ள அன்பின் தன்மை குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திரு இதய விழா, இயேசு கிறிஸ்துவில் இறைவனின் அன்பைக் கொண்டாடும் விழா என்றுரைத்த திருத்தந்தை, இந்த அன்பின் இரு கூறுகள் குறித்து விளக்கினார்.
முதலில் இந்த அன்பு பெறுவதைவிட அதிகம் கொடுக்கும் என்றும், இரண்டாவது, இந்த அன்பு, வார்த்தைகளைவிட அதிகம் செயல்களில் வெளிப்படும் என்றும் விளக்கிய திருத்தந்தை, இந்த அன்பு தொடர்புகொள்கிறது, இது எப்போதும் தம்மை வெளிப்படுத்துகிறது என்பதால் இவ்வன்பு, பெறுவதைவிட அதிகம் அளிக்கும் என்று சொல்லுகிறோம் என்று கூறினார்.
இறைவன் எப்போதும் நமக்கு முன்னால் இருக்கிறார், தம் இதயத்தில் நம்மைப் பெறுவதற்கு நமக்காகக் காத்திருக்கிறார் என்ற புரிதலானது அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் பேருண்மையை நாம் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன் தமது மறைபொருளான அன்பு உலகத்தில் நாம் நுழைவதற்கு வரங்களைத் தருகிறார் என்று கூறிய திருத்தந்தை, இறைவனோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகள் போல் மாற வேண்டும் எனவும் தனது மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.