2014-06-27 15:15:38

ஜூன்,28,2014. புனிதரும் மனிதரே. – கடும் செபமும் தபமும் புனிதையாக்கின


இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் 1566ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பிறந்த புனித மரிய மக்தலேனா தே பாசி, கார்மல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்.
புனித மரிய மக்தலேனா தே பாசி, இத்தாலிய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த உயர் குடியாகிய பாசி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் திருமுழுக்குப் பெயர் கத்ரினா என்பதாகும். இவர் தனது 14ம் வயதில் துறவு சபையில் சேர்ந்தாலும், அவரின் குடும்பத்தின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தினபோதும், அவர்களது மனதை மாற்றி, தன் 16ம் வயதில் கார்மல் சபையில் சேர்ந்து, மரிய மக்தலேனா என்னும் பெயரை, தன் துறவறப் பெயராகக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், கடும் தவமும், செபமும் செய்து வந்தார். 1607ம் ஆண்டு மே 25ம் தேதி தன் 41ம் வயதில் இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் காலமானார் இப்புனிதர்.
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு அருளாளர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டு, திருத்தந்தை எட்டாம் அர்பனால் 1626ல் வழங்கப்பட்டது. திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட், 1669 ஏப்ரல் 28ம் தேதி மரிய மக்தலேனா தே பாசியை புனிதராக அறிவித்தார். இவரின் விழா திருஅவையில் மே 25 அன்று சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.