2014-06-27 16:03:12

2014ம் ஆண்டு இறுதிக்குள் உலகின் பல நாடுகளை எல் நினோ தாக்கும் அபாயம், ஐ.நா.எச்சரிக்கை


ஜூன்,27,2014. இவ்வாண்டு இறுதிக்குள் எல் நினோ தட்பவெப்பநிலை ஏற்படும் மற்றும் அது, உலக அளவில் பருவ காலங்களில் மாற்றங்களை உண்டாக்கும் என, WMO என்ற ஐ.நா. வானிலை ஆய்வு மையம் இவ்வியாழனன்று எச்சரித்தது.
எல் நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தால், உலகின் வெப்பநிலை பாதிக்கப்பட்டு, சில நாடுகளில் வறட்சியும், சில நாடுகளில் அதிக மழைப் பொழிவும், அதன் காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என அம்மையத்தின் பொதுச் செயலர் Michel Jarraud கூறினார்.
எல் நினோ என்பது, தட்பவெப்ப மாற்றத்தால், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப நீரோட்டமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் பல நாடுகளை எல் நினோ தாக்கும் அபாயம் உள்ளதாக, ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா. வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் எல் நினோவின் பாதிப்பு 60 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 75 முதல் 80 விழுக்காடு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எல் நினோவின் பாதிப்பால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், இந்தியாவில் வழக்கமான பருவமழையின் அளவு குறையலாம் என்றும் அந்த ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது .

ஆதாரம் : AP







All the contents on this site are copyrighted ©.