2014-06-26 16:40:28

திருத்தந்தையின் புதன் பொது மறையுரை


ஜூன்,25,2014. அன்பர்களே, உரோம் நகரில் கடந்த சில நாள்களாக மழையின் அறிகுறிகள் இன்றி இருந்துவந்த வானம், புதன் அதிகாலையில் தூறத் துவங்கியது. திருத்தந்தையின் புதன் பொது மறையுரை இடம்பெறுவதற்கு முன்னரும் அவ்வப்போது தூறல் இடம்பெற்றுவந்ததால், கடந்த வாரம் போலவே இவ்வாரமும் நோயாளிகளை திருந்தத்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்து ஆசீர் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'இக்கோடைக்கால வெப்பம் உங்களைச் சிரமப்படுத்தலாம், அதேவேளை இன்று மழை பெய்யுமோ என்ற அச்சமும் உள்ளது, ஆகவே, நீங்கள் இந்த அரங்கிலேயே அமர்ந்து பெரிய திரையில் இன்றைய மறையுரைக்குச் செவிமடுப்பதே சிறப்பு' என்று நோயாளிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆசீரையும் அவர்களுக்கு அளித்தபின், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திறந்த காரில் மக்கள் மத்தியில் வலம் வந்தார். தூய பேதுரு வளாக மேடை சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக, திருஅவை என்ற தலைப்பில் தனது மறையுரையை ஆரம்பித்தார்.
இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட திருஅவை, பழைய ஏற்பாட்டில் தனது மூலத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் ஏற்கனவே நோக்கியுள்ளோம். அதாவது, பழைய ஏற்பாட்டில் இறைவன் தன் மக்களை ஒருங்கிணைத்ததையும், காலம் நிறைவுற்றபோது, மனிதகுலமனைத்தின் ஒன்றிப்பின் அருளடையாளமாக திருஅவையை உருவாக்க தன் மகனை அனுப்பியதையும் குறித்துக் கண்டோம். இந்த மிகப்பெரும் குடும்பத்தில் ஒன்றிணைவதற்கு இறைவன் நம்மை அழைக்கிறார். யாரும் அவரவர் முயற்சியால் கிறிஸ்தவராவதில்லை, மாறாக இறைவனுடன் ஆன நம் உறவுக்கு, பிறருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். விசுவாசத்தை நமக்கு ஊட்டியவர்களுக்கு, நம்மை திருமுழுக்கு நோக்கி அழைத்துச் சென்றவர்களுக்கு, நமக்குச் செபிக்கக் கற்றுக்கொடுத்தவர்களுக்கு, கிறிஸ்தவ வாழ்வின் அழகை நமக்குக் காண்பித்தவர்களுக்கு, நம் பெற்றோருக்கு, தாத்தா பாட்டிகளுக்கு, நம் அருட்தந்தையர்களுக்கு, துறவியருக்கு, ஆசிரியர்களுக்கு என அனைவருக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களால் மட்டும் இல்லை, அவர்களோடு ஒன்றித்திருப்பதாலுமே நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவுடனான நம் உறவு தனிப்பட்டமுறையிலானதேயொழிய அது இரகசியமானதல்ல. இந்த உறவானது, திருஅவையில் பிறந்து, திருஅவையால் வளப்படுத்தப்பட்டு, திருஅவையுடனான ஒன்றிப்பில் காணப்படுவது. நம்முடைய பகிர்வுத் திருப்பயணம் எப்போதும் எளிதாக இருப்பதில்லை. மனிதப் பலவீனங்களையும், குறைபாடுகளையும், ஏன், திருஅவையின் வாழ்வில் அவதூறான நடவடிக்கைகளைக்கூட நாம் சிலவேளைகளில் சந்திக்க நேரலாம். இருப்பினும், இறைவன், நாம் நம் சகோதர சகோதரிகளை அன்புகூர்வதன் வழியாகவும், திருஅவையின் தோழமையில் நிலைத்திருப்பதன் வழியாகவும், கிறிஸ்துவின் திரு உடலின் அங்கத்தினர்களாகிய நாம் ஒவ்வொரு பொருளிலும் விடயங்களிலும் விசுவாசத்தில் வளர்வதற்குத் தேவையான புனிதத்துவத்தைத் தேடுவதன் வழியாகவும் இறைவனைக் கண்டு அவரைக் அன்பு கூர இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வாறு இப்புதன் பொது மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை, பாலஸ்தீனிய மக்களிடையே கடந்த 40 ஆண்டுகளாக கல்விப்பணியாற்றிவரும் பாலஸ்தீனிய பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் குழுவுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் இந்த புதன் மறையுரையில் கலந்து கொண்ட இந்தியா, வியட்நாம், தாய்வான் உட்பட பல நாடுகளின் பயணிகளுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.