2014-06-26 16:43:04

திருத்தந்தை பிரான்சிஸ் : ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு திருஅவை நெருக்கமாக இருக்கின்றது


ஜூன்,26,2014. கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளோடு தான் மிகுந்த நெருக்கமாய் இருப்பதாகவும், தனது அண்மை புனிதபூமி திருப்பயணம் தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்ததாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு உதவும் பிறரன்பு நிறுவனங்கள் அமைப்பு (ROACO) நடத்திய 87வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 80 பிரதிநிதிகளை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பு ஏற்படவும், பல்வேறு மதங்களிடையே தொடர்ந்து உரையாடல் நடைபெறவும் புதுப்பிக்கப்பட்ட பொறுப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இம்முயற்சிகளை தான் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகங்களைச் சிறப்பாக இச்சந்திப்பில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இம்மக்களோடும், புனிதபூமி மற்றும் மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள நம் சகோதர சகோதரிகளோடும், தற்போது கடும் துன்பநிலைகளை அனுபவிக்கும் உக்ரேய்ன், இன்னும், உரோமேனிய மக்களோடும் கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தலைவர்களோடு அண்மையில் வத்திக்கானில் ஒலிவக் கன்றை நட்டதைக் குறிப்பிட்டு, இது பல கரங்களால் வளர்க்கப்ப்டுவதால் இது அமைதியின் அடையாளமாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ROACO அமைப்பு இம்மாதம் 23 முதல் 26 வரை தனது 87வது ஆண்டுக் கூட்டத்தை நடத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.