2014-06-26 16:08:07

ஜூன்,27,2014. புனிதரும் மனிதரே : சிறுவயதிலேயே பிணையாளியாகப் பரிமாறப்பட்டவர் (St. Pelagius of Cordova)


இஸ்பெயின் நாட்டின் கோர்தோவாவில் கி.பி.912ம் ஆண்டில் பிறந்த பெலாஜியுஸ் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்டவர். பெலாஜியுசுக்கு பத்து வயது நடந்தபோது, அவரது மாமா, அவரை, al-Andalusன் முஸ்லிம் அரசர் 3ம் Abd-ar-Rahmanக்கு பிணையாளியாக விற்றார். மூர்ஸ் இனத்தவரால் கைதுசெய்யப்பட்டிருந்த Hermoygius ஆயர் விடுதலை செய்யப்படுவதற்காக இவ்வாறு சிறுவன் பெலாஜியுசை விற்றார் அவரது மாமா. இந்த ஆயர் இவர்களுக்கு உறவினர். பெலாஜியுஸ் மூன்றாண்டுகள் பிணையாளியாக சிறையில் இருந்த பின்னரும் அந்த ஆயர் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் இந்தச் சிறைவாழ்வில் சிறுவன் பெலாஜியுஸ் காட்டிய துணிச்சலும், அவனது ஆழமான விசுவாசமும், அவனது அழகும் அந்த முஸ்லிம் அரசரை வெகுவாய்க் கவர்ந்தன. எனவே, பெலாஜியுசுக்கு 13 வயது நடந்தபோது, அவன் இசுலாமுக்கு மதம் மாறினால் அவனை விடுதலை செய்வதாக உறுதியளித்தார் அரசர் 3ம் Abd-ar-Rahman. ஆனால் சிறுவன் பெலாஜியுஸ் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததால், இசுலாமுக்கு மதம் மாற மறுத்துவிட்டான். அதேசமயம், ஓரினச்சேர்க்கை நடத்தை கொண்டிருந்த அந்த முஸ்லிம் அரசர், சிறுவன் பெலாஜியுசின் அழகில் மயங்கி அவனை தனது பாலியல் இன்பத்துக்கு உடன்பட வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு உடன்படாமல் அரசனின் நடத்தையைக் குறை கூறி அவமதித்தான் சிறுவன் பெலாஜியுஸ். இறுதியில் கடும் சினம்கொண்ட அந்த முஸ்லிம் அரசன் Abd-ar-Rahman, சிறுவன் பெலாஜியுசை ஒரு குட்டிச் சுவரில் நிர்வாணமாகத் தொங்கவிட்டு ஆறு மணி நேரம் சித்ரவதை செய்து உருக்குலைய வைத்தான். அனைத்திலும் உறுதியாய் இருந்த 13 வயது சிறுவன் பெலாஜியுஸ் இறுதியில் 926ம் ஆண்டில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டான். புனித பெலாஜியுஸ், புனித பெலாயோ எனவும் அழைக்கப்படுகிறார். கோர்தோவா புனித பெலாஜியுஸ், கைவிடப்பட்டவர்கள், சித்ரவதைக்குப் பலியானவர்கள், ஆகியோர்க்குப் பாதுகாவலர். இந்த மறைசாட்சிப் புனிதரின் விழா ஜூன் 26.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.