2014-06-26 16:43:43

இலங்கை மீதான ஐ. நா. புலன் விசாரணைக்கு வல்லுனர்கள் பெயர்கள் அறிவிப்பு, இந்திய ஆம்னெஷ்டி பாராட்டு


ஜூன்,26,2014. இலங்கையில் 2009ம் ஆண்டின் ஆயுதம் ஏந்திய கடும் தாக்குதல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான புலன் விசாரணைகளை நடத்துவதற்கு மூன்று வல்லுனர்களின் பெயர்களை ஐ.நா. அறிவித்திருப்பதை வரவேற்றுள்ளது, அனைத்துலக ஆம்னெஷ்டி மனித உரிமைகள் கழகத்தின் இந்திய அமைப்பு.
நொபெல் அமைதி பெற்றவரும், ஃபின்லாந்து அரசின் முன்னாள் அரசுத்தலைவருமான Martti Ahtisaari, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரலும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான Silvia Cartwright, பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலரும், அந்நாட்டின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான Asma Jahangir ஆகிய மூன்று வல்லுனர்கள் பெயரை இப்புதனன்று அறிவித்தார் ஐ.நா. மனித உரிமைகள் அவை ஆணையர் நவி பிள்ளை
இந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து நவி பிள்ளை அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இம்மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகளில் இடம் பெற்றதாக கூறப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ. நா. மனித உரிமை குழுவுக்கு, ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் இசைவளித்துள்ளனர் என்று ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : PTI







All the contents on this site are copyrighted ©.