2014-06-26 16:43:26

அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறாருடன் திருத்தந்தை ஒருமைப்பாடு


ஜூன்,26,2014. ஆப்ரிக்காவில் அல்பினிசம் (PWA) நோயால் பாதிக்கப்பட்ட சிறார், மந்திரவாதி மருத்துவர்களாலும் மற்றவர்களாலும் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கிவரும்வேளை, இச்சிறாரின் நலவாழ்வுக்கு உதவும் அனைத்துலக நடவடிக்கை ஒன்றுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"ஆப்ரிக்க அல்பினோஸ் சிறாருக்கு உதவி" என்ற தலைப்பில் இப்புதனன்று தொடங்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு ஆதரவாக, “Ombra Bianco” என்ற நூலிலிருந்து பல பகுதிகளை ஒலி வடிவில் பதிவுசெய்து தனது ஆதரவை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
Cristiano Gentile என்ற இத்தாலிய எழுத்தாளர் எழுதிய “Ombra Bianco” என்ற நூல் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறார் பற்றி விளக்குகின்றது.
பல்வேறு காரணங்களால் உடம்பு வெண்மை நிறமாக மாறும் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சில உறுப்புகள் மந்திர சக்தி கொண்டவை என்ற மூட நம்பிக்கையில், ஆப்ரிக்காவின் பெரிய ஏரிப் பகுதி நாடுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்ட சிறார் மந்திரவாதி மருத்துவர்களால் வன்முறையாய்த் தாக்கப்பட்டு உறுப்புக்கள் முடமாக்கப்படுகின்றனர் மற்றும் கொலை செய்யப்படுகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.
Albinism என்ற இந்த அரிய நோயால், உலக அளவில் இருபதாயிரத்துக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இந்நோய்ப் பாதிப்பு அவ்வளவாக இல்லையெனினும், ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படுகின்றது.
மேலும், எவ்வித மனித மற்றும் சமூக முன்னேற்றத்தை உருக்குலையாது தாங்கிப் பிடிப்பதற்கு குடும்பம் இன்றியமையாதது என, இவ்வியாழனன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.