2014-06-25 16:47:06

சிங்கப்பூர் தலத்திருஅவை பாலியல் பாகுபாட்டைக் கண்டிக்கிறது, பேராயர் Seng Chye


ஜூன்,25,2014. தந்தை, தாய், குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய குடும்பமே, ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமைகின்றது என்பதை கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் காத்து வருகின்றது என, சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye கூறினார்.
ஒரே பாலின கவர்ச்சியுள்ள தனிநபர்கள் இருப்பதை சிங்கப்பூர் தலத்திருஅவை ஏற்கின்ற அதேவேளை, எந்தவிதமான பாலியல் பாகுபாடுகளையும் புறக்கணிக்கின்றது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த பேராயர் Seng Chye, ஒரே பாலின உறவுகள் இறைத்திட்டத்தோடு ஒத்திணங்கிச் செல்லாதவை என்பதையும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இவ்வாரத்தில் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளவேளை, முஸ்லிம் தலைவர் ஒருவர் இதற்கு எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருகிறார். முஸ்லிம்களுடன் கிறிஸ்தவர்களும் இம்முயற்சியில் சேர்ந்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கடந்த ஆண்டில் நடத்திய பேரணியில் 21 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர், அதாவது 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கத்தோலிக்கர். மேலும், 33 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். 18 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 15 விழுக்காட்டினர் இஸ்லாமியர். 5 விழுக்காட்டினர் இந்துக்கள் மற்றும் 11 விழுக்காட்டினர் தாவோயிசத்தினர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.