2014-06-25 16:32:20

அமைதி ஆர்வலர்கள் – 1934ல் நொபெல் அமைதி விருது பெற்ற Arthur Henderson


ஜூன்,25,2014. பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் 1863ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் Arthur Henderson. இவரது தந்தை David Henderson ஒரு சாதாரண ஏழைத் தொழிலாளி. David Henderson 1872ம் ஆண்டில் காலமானார். அச்சமயத்தில் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. தந்தையின் இறப்புக்குப் பின்னர் Arthur பள்ளிப் படிப்பை கைவிட்டு புகைப்படக் கடையில் வேலையில் சேர்ந்தார். இவரது தாய் மறுதிருமணம் செய்து கொண்ட பின்னர் இவரது குடும்பம் Newcastle-upon-Tyne என்ற ஊருக்கு புலம் பெயர்ந்தது. பின்னர் மூன்று ஆண்டுகள் Arthur பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். இவர் தனது 12வது வயதில் Robert Stephenson கனிமங்கள் வார்ப்புப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். இந்தப் பணிமனையின் பணியாளர்கள் மதிய உணவின்போது உயிரூட்டமுள்ள உரையாடல்களை நடத்தினர். இதுவே Arthur Henderson அவர்களின் வகுப்பறையாக மாறியது. அச்சமயங்களில் இவர் வாசித்த செய்தித்தாள்கள் இவருக்கு பாடப்புத்தகங்களாக மாறின. அந்தப் பணிமனையில் நல்லதொரு பெயர் எடுத்த இவர், தனது 18வது வயதில் இரும்புத்தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தார். குறைந்த காலத்திலேயே இதன் செயலராக நியமிக்கப்பட்டார். உள்ளூர், மாவட்ட மற்றும் தேசிய அளவில் என, இந்தப் பொறுப்பை, தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார் Arthur Henderson.
Arthur Henderson இளைஞராக இருந்தபோதே மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். அச்சபையைச் சார்ந்த Eleanor என்ற பெண்ணை 1888ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். முதல் உலகப்போரில் இராணுவத்தில் பணியாற்றிய இவர்களின் மூத்த மகன் அப்போரில் கொல்லப்பட்டார். மற்ற இரு மகன்களும் இவரின் இறுதி பத்தாண்டுகளில் இவருடன் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக பணி செய்தனர். Henderson அவர்கள் தனது பேச்சாற்றலால் விரைவில் அரசியல் வாழ்வில் புகழ் அடைந்தார். 1892ம் ஆண்டில் நகரசபை உறுப்பினரானார். அதே ஆண்டில் இவர் சேர்ந்திருந்த தொழில் சங்கம் இவரை தனது மாவட்ட பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து, முழுநேர ஊதியமும் கொடுத்தது. 1896ம் ஆண்டில் இவரது குடும்பம் Darlington நகரில் குடியேறியது. 1903ம் ஆண்டில் Durham மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் Darlingtonல், தொழிற்கட்சியின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.
1900மாம் ஆண்டிலிருந்து தொழில் சங்கக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார் Henderson. இவற்றில் இவரது திறமைகள் சிறப்பாக வெளிப்பட்டன. 1900மாம் ஆண்டில் தொழில் சங்கப் பிரதிநிதித்துவ குழுவை அமைத்த இலண்டன் கருத்தரங்கில் கலந்துகொண்டார் இக்குழுவின் முயற்சியால் 1903ம் ஆண்டில் இக்குழு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. பின்னர், 1906ம் ஆண்டில் Henderson தலைமையில் நடந்த கருத்தரங்கில் இக்குழு தொழில் கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சியின் செயலராக, 1911ம் ஆண்டு முதல் 1934ம் ஆண்டுவரை பணியில் இருந்தார். இக்கட்சியின் செயல்திட்டக் குழுவின் தலைவராக, பல தடவைகள் செயலாற்றியுள்ளார் Henderson. 1918ம் ஆண்டில் இக்கட்சியின் அரசியல் அமைப்பை மறுபரிசீலனை செய்யும் பணியை முன்னின்று நடத்திய இவர், இக்கட்சிக்கு அரசியல் வாழ்வில் புத்துயிர் ஊட்டினார். இதன்மூலம் பிரித்தானியாவின் அரசியல் வாழ்வில் இக்கட்சி வல்லமைமிகுந்த கட்சியாக உருவெடுத்தது.
Henderson அவர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருந்தார். முதல் உலகப்போர் முடிவடைந்த சமயத்தில் இவரது சிந்தனைகள் பன்னாட்டு அளவில் பரந்து விரிந்தன. 1917ம் ஆண்டில் பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ பார்வையாளராக இரஷ்யா சென்றார். 1918ம் ஆண்டில் சோசலிஷவாதிகள் முன்வைத்த அனைத்துலக கருத்தரங்கை நிராகரித்த இவர், அதே ஆண்டில் இப்போரில் தோல்வியடைந்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகளின் பிரதிநிதிகள், வெற்றிபெற்ற நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசுவதற்காக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். இக்கூட்டம், Versaillesல் நேசநாடுகள் அமைதி குறித்து திட்டம் வகுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தது. இவ்வாறு உலக அமைதிக்கென பல்வேறு முயற்சிகளை எடுத்த Henderson, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆயுதக்களைவு முயற்சிக்கு கருத்துருவாக்கம் கொடுத்தவராக இருந்தார். 1931ம் ஆண்டு சனவரியில் ஆயுதக்களைவு கருத்தரங்கு நடத்தப்படுவதற்குத் தயார் செய்தார். அக்கருத்தரங்கின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1932ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியன்று அந்த அவைக்கு இவர் தலைமை தாங்கினார். இவரது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு மத்தியில் அக்கருத்தரங்கு தோல்வியடைந்தது. உலகமும் பொருளாதாரச் சரிவால் பாதிக்கப்பட்டது. ஹிட்லரின் தலைமையில் ஜெர்மனி அக்கருத்தரங்கிலிருந்து 1933ம் ஆண்டு அக்டோபரில் விலகிக்கொண்டது. இந்தக் கருத்தரங்கின் தோல்வி 2ம் உலகப் போரை முன்குறித்துக் காட்டியது. இவ்வாறு அமைதிக்கும் ஆயுதக் களைவுக்குமென பல முயற்சிகள் எடுத்த Henderson அவர்களுக்கு, ஆஸ்லோ நொபெல் அமைதிக் குழு, 1934ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதை வழங்கியது.
இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய Mary A. Hamilton சொன்னார் : “தனது பொறுப்பில் தெளிவாக இருக்கும் ஒரு மனிதர் பற்றிச் சொல்லவேண்டுமானால் அவர் Arthur Henderson” என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.