2014-06-24 15:51:59

சூடானில் மதம் மாற்றக் குற்றம் சுமத்தப்பட்ட கத்தோலிக்கப் பெண் விடுதலை


ஜூன்,24,2014. சூடானில் ஒரு கிறிஸ்தவரை மணந்து கொண்டதற்காக, மதம் மாற்றம் குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பிடப்பட்டிருந்த 26 வயது மிரியம் இப்ராஹிம் என்ற கத்தோலிக்கப் பெண் இத்திங்களன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு குடிமகன் Daniel Bicensio Wani என்பவரை கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்வதற்கு முன்னர் கத்தோலிக்கராக மாறினார் இப்ராஹிம். இவர்களின் ஒரு வயது ஆண் குழந்தையும் தாயோடு சிறையில் இருந்தது. இப்ராஹிம் கடந்த மே மாதத்தில் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
சூடான் குற்றவியல் சட்டப்படி, முஸ்லிம்கள் பிற மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன்படி இப்ராஹிம் தூக்கிலிடப்பட வேண்டுமென கடந்த மே மாதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையொட்டி சூடான் கார்ட்டூம் உயர்மறை மாவட்ட முதன்மை குரு உட்பட அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு சூடான் அரசைக் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.