2014-06-24 15:52:06

கைம்பெண்களுக்கு எதிரான கடும் உரிமை மீறல்கள் நிறுத்தப்பட ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு


ஜூன்,24,2014. ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின்னர், அப்பெண் தனது நிலை, தனக்குரிய வாழ்வாதாரங்கள் அல்லது தனக்குரிய சொத்துக்களை இழக்கக் கூடாது, இருந்தபோதிலும், இன்றும் உலகில் இலட்சக்கணக்கான கைம்பெண்கள் உரிமை மீறல்கள், பாகுபாடுகள், கைவிடப்பட்ட நிலை, சொத்துரிமை இழப்பு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார்.
ஜூன் 23, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக கைம்பெண்கள் நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன், கைம்பெண்கள் ஒழிப்புச் செயல், பாலியல் வன்செயல், உயிரோடு எரிக்கப்படுதல் உட்பட பல்வேறு கொடுமையான பழக்கங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயல்கள், கைம்பெண்களின் குழந்தைகளின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள பான் கி மூன், பெண்கள் மேம்பாடு, பாலியல் சமத்துவம் போன்றவற்றை ஊக்குவிக்கவும், பெண்களுக்கெதிரான அனைத்துவகையான வன்முறைகளை ஒழிக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
2011ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று முதல் உலக கைம்பெண்கள் நாளை ஐ.நா.பொது அவை அறிவித்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.