2014-06-24 15:52:19

உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா


ஜூன்,24,2014. கத்தாரில் நடந்துவரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வுக் கூட்டத்தில் இந்தியாவின் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா மதிப்பு மிக்க உலக பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்பட்டது.
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 15-ம் தேதி முதல் உலகின் முக்கிய பாரம்பரியச் சின்னங்களைத் தேர்வு செய்யும் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான கூட்டம் நடந்து வருகிறது.
உலகில் வேறு எங்கும் வாழாத ஓரிட வாழ்விகளும், தனித்துவம் பெற்ற தாவரங்களும் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவில் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளையில் உள்ளூர் பழங்குடியின மக்களின் நலனிலும் இந்திய அரசு சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறது. நீர்வளங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு குழுவின் தலைவரான திருமதி ஷேக்கியா அல் மயாஸா பிந்த் ஹாமாத் காலிஃபா அல்தானி தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில் கலாச்சார பிரிவில், குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ‘ராணி கி வாவ்’ படித்துறை கிணற்றை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது.
மரூ-குர் ஜாரா பரம்பரையால் கட்டப்பட்ட இந்தக் கிணறு கட்டிடக் கலைக்கு புகழ்பெற்றது. சரஸ்வதி நதி அழிந்தபோது இதுவும் பூமிக்குள் புதையுண்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது ஏறக்குறைய 700 ஆண்டுகள் கழித்து இந்திய தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஏழு அடுக்குகள் கொண்ட இந்தப் படித்துறையின் ஒவ்வோர் அடுக்கிலும் அழகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.