2014-06-24 15:51:35

ஈராக்கின் மோதல்களுக்கு அரசியல் தீர்வு காணப்படுமாறு வேண்டுகோள், முதுபெரும் தந்தை சாக்கோ


ஜூன்,24,2014. ஈராக்கில் சுன்னிப் பிரிவு இஸ்லாம் புரட்சியாளர்கள் அந்நாட்டின் முக்கிய நகரங்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவரும்வேளை, அந்நாட்டில் அரசியல் தீர்வு காணப்படுமாறு பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கேட்டுக்கொண்டார்.
ஈராக்கின் கத்தோலிக்கத் தலைவர்கள் சார்பில் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் அனைத்துக் குடிமக்களின் பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும் தேசிய ஐக்கிய அரசை உருவாக்குவதற்கு முயற்சிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை முன்வைத்துள்ள தற்போதைய நெருக்கடி நிலைக்கு அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் உள்நாட்டுச் சண்டை அதிகரிப்பதற்கும் அது காரணமாக அமையும் என்றும் எச்சரித்துள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இப்பிரச்சனையில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட்டால் அச்சக்திகள் தங்கள் சொந்த ஆதாயங்களையே தேடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் தற்போதைய நிலை நீடித்தால் இதில் வெற்றியாளர்கள், தோல்வியாளர்கள் என யாருமே இருக்கமாட்டார்கள், ஏனெனில் ஒவ்வொருவருமே தோல்வியாளர்களாக இருப்பார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் ஜான் கெரி அவர்கள் பாக்தாத் சென்றுள்ளார்.
மேலும், ஈராக்கின் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் ஹூசைனுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.