2014-06-23 15:49:55

வாரம் ஓர் அலசல் – சித்ரவதை மாபெரும் பாவம்


ஜூன்,23,201 RealAudioMP3 4. “நீ அழகாக இல்லை எனக்கூறி புதுப்பெண் சித்ரவதை, கணவன் கைது” என்று தலைப்பிட்டு இஞ்ஞாயிறு மாலைமலர் தினத்தாளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த 29 வயது ஜெயமோகனுக்கும், 22 துர்கா தேவிக்கும் 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு மாதமாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, நீ அழகாக இல்லை, எனக்கு நீ பொருத்தமானவள் இல்லை, உன் வீட்டிற்குச் சென்றுவிடு எனக் கூறி ஜெயமோகன், மனைவி துர்காதேவியை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், இவர் தனது மனைவியை உடல் அளவிலும் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு ஜெயமோகனின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த துர்காதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயமோகனை கைது செய்தனர் என்று அச்செய்தியில் சொல்லப்பட்டிருந்தது. மேலும், ஓர் இதழில், 'கயமையே உருவான ஒரு கணவன்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் சில கணவர்களால் பெண்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் விவரிக்கப்பட்டிருந்தன.
இன்னும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேய் பிடித்ததாகக் கூறி மனைவியை நிர்வாணமாக்கி தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேரை திருப்பத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர் என்ற செய்தி ஒன்றை அண்மையில் வாசித்தோம்(செப்.5,2013). நதியா என்ற இந்தப் பெண்ணை, சிறிதுநேரம் வெளியேவிட்டு, பின்னர் மீண்டும் அறையில் வைத்து பூட்டி விடுவார்களாம். மேலும், திருப்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் அரபி மொழி படிக்காததால் ஒரு பள்ளி நிர்வாகி அச்சிறுவனுக்கு சூடு வைத்துள்ளார்; இதனால் பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார் (டிச.25,2013).
தேவிபட்டிணம் என்ற ஊரில் தோஷம் கழிக்க வரும் பல பெண்களிடம் அர்ச்சகர் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாகவும், காவல்நிலையத்தில் அவர் பற்றி புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அன்பர்களே, இப்படிப் பல வகையான சித்ரவதைச் செய்திகளைத் தினமும் செய்திகளில் வாசிக்கிறோம். இலங்கை இராணுவத்துக்குத் தேர்வான தமிழ்ப் பெண்களை இராணுவப் பயிற்சியாளர்கள் சித்ரவதை செய்தது உண்மைதான் என்றும், அது தொடர்பாக வெளியான ஒலி-ஒளிக் காட்சிகள் போலியானவை அல்ல என்றும் இலங்கை இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது (மார்ச்23,2014) என முன்னரே நாம் ஒரு செய்தியை வாசித்திருக்கிறோம். இப்போதும் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக, புத்தமத அடிப்படைவாதக் குழுக்களால் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. “கொழுப்பு அடங்காத கொழும்பு! இன அழிப்பைத் தொடர்ந்து மத அழிப்பு...” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று ஓர் இதழில் பிரசுரமாகியிருந்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்​களை, சிங்களர்கள் இன்றும் தொடர்ந்து​கொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். அனைத்து நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஒன்றுமே நடக்காத விடயத்தைப் பெரிதுபடுத்தி முஸ்லிம்கள்மீது தாக்குதல் நடத்தி, இதுவரை மூன்று முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டும் ஆயுதங்களால் தாக்கியும் கொலைசெய்து இருக்கிறார்கள் என, இலங்கையில் இருக்கும் ஒரு முஸ்லிம் அமைப்பின் அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கிறார்.
சித்ரவதை செய்வது கொடிய பாவம், இது கடும் மனித உரிமை மீறல் என்றுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும், மதத் தலைவர்களும் கூறி வருகின்றனர். ஜூன் 26, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும், சித்ரவதைகளுக்குப் பலியானவர்களுக்கு ஆதரவு வழங்கும் அனைத்துலக நாளை இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், "மக்களைச் சித்ரவதைப்படுத்துவது கொடிய பாவம், மிகக் கடுமையான பாவம்" என்று சொல்லி, உலகில் நடத்தப்படும் அனைத்துவிதமான சித்ரவதைகளையும் வன்மையாய்க் கண்டித்துப் பேசினார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளிடம், சித்ரவதை செய்யும் பழக்கத்தை நிறுத்துவதற்கு கிறிஸ்தவர்கள் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் அதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண் RealAudioMP3 டார். வாழ்வு ஒரு கொடை. அதை நாம் மற்றவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் திருத்தந்தை கூறினார்.
மனிதர்களைச் சித்ரவதை செய்வது ஒரு குற்றம் என்பதை மனித சமுதாயத்துக்கு நினைவுபடுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, இந்த உலக நாளுக்கு இசைவு அளித்தது. சித்ரவதைகளுக்குப் பலியானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் டென்மார்க் நாட்டிலுள்ள புகழ்பெற்ற அனைத்துலக அவையின் பரிந்துரையால் ஐ.நா.பொது அவை இந்நாளை உருவாக்கியது. 1945ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ஐ.நா. அரசியல் அமைப்பு கையெழுத்திடப்பட்டது. அடுத்து, 1987ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியன்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா.ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்த இரண்டு காரணங்களுக்காக, ஜூன் 26ம் தேதியை, சித்ரவதைகளுக்குப் பலியானவர்களுக்கு ஆதரவு வழங்கும் அனைத்துலக நாளாக ஐ.நா. குறித்தது. 1998ம் ஆண்டில் இந்நாள் முதல்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளிலிருந்து ஏறக்குறைய நூறு நிறுவனங்கள் ஆண்டுதோறும் இவ்வுலக நாளை கடைப்பிடித்து வருகின்றன. இந்நாள் போஸ்னியா-எர்செகொவினா குடியரசில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதரும் சித்ரவதைக்கோ, மனிதமற்ற நிலைக்கோ, மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் தண்டனைக்கோ அல்லது அவ்வாறு நடத்தப்படவோ உள்ளாகக் கூடாது என, அனைத்துலக மனித உரிமைகள் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
நாடுகளின் சிறைகளிலும், குடும்பங்களிலும், அகதிகள் முகாம்களிலும், தடுப்புக் காவல் நிலையங்களிலும் மனிதர் எவ்வாறு சித்ரவதைப்படுத்தப்படுகின்றனர் என்பதை நாம் பார்க்கிறோம், வாசிக்கிறோம், அவை பற்றிக் கேள்விப்படுகிறோம். இலங்கையில் இடம்பெற்ற சித்ரவதைகள் பற்றி நாம் அறியாததல்ல. ஈராக்கில், சிரியாவில் தற்போது நடந்துவரும் வன்முறை மோதல்களில், மக்கள் எதிர்தரப்பிடம் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 7ம் தேதி திங்கள்கிழமையன்று சிரியாவில், 75 வயது ஹாலந்து நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் Frans Van Der Lugt அவர்கள், அவரது இல்லத்திலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு முகம் மூடிய துப்பாக்கி மனிதர்களால் கொடூரமாய்ச் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் சிரியாவில் அகதிகள் மத்தியில் பணியாற்றி வந்தவர்.
இஞ்ஞாயிறன்று வெளியான ஒரு செய்தி பலரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்துவரும் யாஹயா அப்டி(Yahya Abdi) என்ற 15 வயது சிறுவன் தனது தந்தையும், சித்தியும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதால் அவர்களிடமிருந்து தப்பித்து ஹவாயில் அகதியாக உள்ள தன் தாயை பார்க்க முடிவு செய்தான். ஆனால் இவனிடம் பயணச்சீட்டு வாங்க பணம் இல்லாததால், நண்பர்களின் அறிவுரையின்படி, தன் தாயைக் காண வேண்டும் என்பதற்காக விமானச் சக்கரத்தில் ஏறக்குறைய 51/2 மணிநேரம் பயணம் செய்துள்ளான். எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சக்கரம் இருக்கும் பகுதியில் சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தொடர்ந்து 51/2 மணிநேரம் பயணம் செய்த இந்தச் சிறுவன், சிறு காயமுமின்றி தரையிறங்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரவதைகளால் துன்புறும் மக்கள், அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, எப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள்! அவர்களுக்கு தங்கள் உயிர் பெரிதாகத் தெரிவதில்லை. அன்பர்களே, மனிதரின் மனதுக்குள் மண்டிக்கிடக்கும் வன்மம், செயல்களில் புகுந்துகொள்கிறபோது அது கொலையாக, சித்ரவதையாக, திருட்டாக, குத்துவெட்டாக மாறுவதே இந்த நிலைகளுக்குக் காரணம் எனச் சொல்ல்லாம். வன்முறை என்பது, மனதில் சேமித்து வைத்த உணர்ச்சிகள் கட்டுப்பாடுகளை மீறி கட்டுக்கடங்காமல் வெளிப்படுவதால் ஏற்படுகிறது. நம் எல்லாருடைய மனத்திலும் வன்முறை விதைகள் விழுந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் அளவுதான் மாறுகின்றது. சிலர் கடவுளின் உதவியை நாடி தங்களை மாற்றி சாதுக்களாக மாறுகின்றனர். சிலரில் விதைக்கப்படும் தீவிரவாத உணர்வுகள், புத்தியை மழுங்கடித்து கண்மூடித்தனமாக அவர்களை வன்முறையில் விழச் செய்கின்றன. நாம் கத்தியை எடுத்து சண்டைபோடாவிட்டாலும் பல முறை மனதுக்குள்ளே மற்றவரைத் தாக்குகிறோம். நமது எண்ணத்துக்கும், எதிர்பார்ப்புக்கும், விருப்பத்துக்கும் மாறாக நடப்பவர்களை மனதுக்குள்ளே கொன்றுபோடுகிறோம். நம் இதயத்தில் இருக்கும் வன்மம் செயலில் வெளிப்படாதவரை நாம் எல்லாரும் மென்மையானவர்கள்.
ஆயுதத்தால் மட்டுமல்ல எண்ணத்தால், சொற்களால் நாம் பிறரை சித்ரவதை செய்கிறோம். சித்ரவதைகள் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அவை மாபெரும் மகா பாவம். அன்பர்களே, வாழ்வு ஒரு கொடை. நாம் பிறருக்குக் கொடையாக வாழ அழைப்புப் பெறுகிறோம். அதைவிடுத்து பிறரை மனத்தாலும், வாய்ச்சொல்லாலும், ஆயுதங்களாலும், நஞ்சு ஊசிகளாலும் சித்ரவதை செய்வது கடவுளை நோகச் செய்வதாகும். நம்மால் சித்ரவதைக்கு ஆளானவர்களின் அலறல் குரல்கள் நம் இதயங்களைத் தட்டும்போது இறைவன் முன்னர் நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்? வாழ்க்கையில் நாம் கற்களை எறிந்தால் அவை காயங்களாக நம்மை வேதனைப்படுத்தும். மாறாக, மலர்களைத் தூவினால் அவை மாலையாக நம் கழுத்தை அலங்கரிக்கும். ஆசீர்வாதங்களை அனுப்பினால் வரங்களாக அவை நம் வாழ்வை மகிழ்ச்சிப்படுத்தும். எனவே யாரையும் எவ்விதத்திலும் துன்புறுத்தாமல் இருப்பதற்குத் தீர்மானிப்போம்.







All the contents on this site are copyrighted ©.