2014-06-23 15:50:37

திருத்தந்தை : பிறருக்காக தங்களையே கையளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்


ஜூன்,23,2014. இயேசு இவ்வுலகிற்கு ஏதோ ஒன்றை வழங்க வரவில்லை, மாறாக, தன்னையே கையளிக்க வந்தார் என்பதை நினைவில் கொள்ளும் கிறிஸ்தவர்கள், பிறருக்காக தங்களையே கையளிக்க முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழாவைக் குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படும் அப்பமாக நாம் ஒவ்வொருவரும் மாறுவதே, இயேசுவைப் பின்பற்றுவதாகும் எனவும் எடுத்துரைத்தார்.
நாம் திருப்பலியில் பங்கேற்று திருநற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொருமுறையும் இயேசு மற்றும் தூய ஆவியின் இருப்பு நம்மில் செயலாற்றி நம் இதயங்களைச் சீர்படுத்துகிறது எனவும் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் பிறரன்பை நாம் இதயம் திறந்து வரவேற்கும்போது, அது நம்மை மாற்றியமைத்து நம்மை அன்புகூர்பவர்களாக ஆக்குகின்றது என எடுத்துரைத்த திருத்தந்தை, அத்தகைய அன்பு, அளவுகளுக்குள் அடங்காத இறையன்பின் மாதிரிகையாக இருக்கும் எனவும் கூறினார். நம்மை அன்புகூராதவர்களையும் நாம் அன்புகூரவும், தீமையை நன்மையால் எதிர்கொள்ளவும், மற்றவர்களை மன்னிக்கவும் அவர்களுடன் பகிரவும், அவர்களை வரவேற்கவும் இறையன்பே நமக்கு உதவுகிறது எனவும் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
சித்ரவதைகளுக்குப் பலியானவர்களுக்கன ஐ.நா. நாள் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுவது குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சித்ரவதைகள் என்பது மிகக்கொடிய பாவம் எனக் குறிப்பிட்டு, சித்ரவதை முறைகள் ஒழிக்கப்பட ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.