2014-06-21 15:28:48

மத்திய கிழக்கில் காணப்படும் இடர்கள் அப்பகுதியின் வரைபடத்தை மாற்றக்கூடும், மாரனைட் ஆயர்கள்


ஜூன்,21,2014. சிரியாவிலும் ஈராக்கிலும் இடம்பெறும் மோதல்கள் குறித்த கவலையை வெளியிட்டுள்ள அதேவேளையில், லெபனன் நாட்டில் அரசுத்தலைவர் இடம் காலியாக இருப்பது அந்நாட்டுக்கு மிகுந்த ஆபத்தை முன்வைக்கின்றது என, லெபனன் நாட்டு மாரனைட் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
லெபனன் அரசுத்தலைவர் மிஷேல் சுலைமான் அவர்களின் பதவிக்காலம் கடந்த மே 25ம் தேதி முடிவுற்றதிலிருந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இந்நிலை, மத்திய கிழக்குப் பகுதியின் வரைபடத்தை மாற்றுவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறினர்.
தங்களது ஆண்டுக் கூட்டத்தை இவ்வாரத்தில் நிறைவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள லெபனன் மாரனைட் ஆயர்கள், நாடு அரசுத்தலைவரின்றி இருப்பது, அந்நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஆபத்தாய் இருக்கின்றது என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
லெபனன் நாட்டின் அரசியல் அமைப்பு 1943ம் ஆண்டின் தேசிய உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, அந்நாட்டின் அரசுத்தலைவர் மாரனைட் கத்தோலிக்கராகவும், பிரதமர் சுன்னிப் பிரிவு இஸ்லாமியராகவும், நாடாளுமன்ற சபாநாயகர் ஷியைட் பிரிவு இஸ்லாமியராகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.